பிரித்தானியாவில் தடுப்பூசி பெற்ற மேலும் 30 பேர் அரிய நோயால் பாதிப்பு!
அஸ்ட்ராஜெனேகா கோவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்திய பின்னர், 30 அரிய ரத்த உறைவு பிரச்சினை அடையாளம் கண்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
BioNTech SE மற்றும் Pfizer Inc தயாரித்த தடுப்பூசியைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து உறைதல் நிகழ்வுகள் குறித்து இதுபோன்ற அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என்று Medicines and Healthcare products Regulatory Agency (MHRA) தெரிவித்துள்ளது.
இருப்பினும், இரத்த உறைவு ஏற்படக்கூடிய அபாயத்தை விட கொரோனாவை தடுப்பதில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் நன்மைகள் அதிகமாக இருப்பதாக இன்னும் நம்புகிறோம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தடுப்பூசிகளை போட தொடங்கியுள்ளன. இருப்பினும், அரிதான மற்றும் சில நேரங்களில் கடுமையான இரத்த உறைவு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்படுவதால், சில நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துவருகின்றன.
மார்ச் 18 அன்று, MHRA வெளியிட்ட அறிக்கையின்படி 11 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதில், 5 பேர் அரிய மூளை இரத்த உறைவு பிரச்சினைக்கு ஆளானதாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான தகவல்களின்படி, அடுத்ததாக மொத்தம் 18.1 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டதில், 30 பேர் இந்த உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், 22 பேர் பெருமூளை சிரை சைனஸ் த்ரோம்போசிஸின் எனும் மிகவும் அரிதான மூளை உறைதல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் 8 பேர் குறைந்த இரத்த பிளேட்லெட்டுகளுடன் தொடர்புடைய பிற உறைதல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
