1 ரூபாய்க்கு உணவு, ரூ.350 சம்பளம்..,இவர்தான் ₹800 கோடி ஹீரோவின் தந்தை: யார் அந்த நபர்?
பாலிவுட்டின் பிரபல சண்டை பயிற்சியாளரான ஷாம் கௌஷலின் வாழ்க்கைப் பயணம், ஒரு காலத்தில் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த ஒருவரின் கதை. அவர் பட்ட கஷ்டங்களும், அதிலிருந்து மீண்டு வந்த விதமும் இன்று பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.
அவரது மகனும், பிரபல நடிகருமான விக்கி கௌஷல், தற்போது ரூ.800 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படத்தில் நடித்து வெற்றிகரமாக வலம் வருகிறார். ஆனால், ஷாம் கௌஷலின் ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இல்லை.
போராட்டம் நிறைந்த தொடக்கம்
1978-ம் ஆண்டு, ஷாம் கௌஷல் தனது தந்தையிடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.3,000 பணத்துடன் மும்பை நகருக்கு வந்தார்.
அவரது கனவு ஒரு கல்லூரி விரிவுரையாளராவதுதான், ஆனால் கடுமையான நிதி நெருக்கடி அந்தக் கனவை தடுத்து நிறுத்தியது. கடன் தொகையை எப்படியாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மும்பையில் வேலை தேடினார்.
அவருக்கு மாதம் ரூ.350 சம்பளத்தில் ஒரு விற்பனையாளர் வேலை கிடைத்தது. தினமும் இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு ரயிலில் பயணித்து வேலைக்குச் சென்றார்.
சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல், ஒரு ரூபாய்க்குள் உணவை முடித்துக்கொள்வார். பல நேரங்களில் பட்டினி கிடந்துள்ளார். வாடகைக்கு வீடு எடுக்க பணமில்லாததால், அலுவலகத்திலேயே இரவைக் கழித்துள்ளார். வெறும் இரண்டு பேண்ட்டுகள் மற்றும் மூன்று சட்டைகளுடன், நண்பரின் வீட்டுக்குச் சென்று உடை மாற்றியுள்ளார்.
வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை
ஒரு நாள் ஷாம் கௌஷல் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். செய்வதறியாது திகைத்து நின்ற அவருக்கு, மும்பையை விட்டு வெளியேறக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
அப்போது, அவருக்கு சில ஸ்டண்ட்மேன் நண்பர்கள் இருந்தனர். அவர்கள் உதவியுடன் 1980-ம் ஆண்டு, ரூ.1,000 உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்தி ஸ்டண்ட்மேன் சங்கத்தில் சேர்ந்தார். இது அவரது வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக அமைந்தது.
அப்போது, பிரபல சண்டை இயக்குநரான வீரு தேவ்கனைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஷாமின் திறமையை உணர்ந்த வீரு, அவரை தன் உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
தேநீர் கொண்டு வருவது முதல் பைகளை எடுத்துச் செல்வது வரை அனைத்தையும் ஷாம் செய்தார். படிப்படியாக, வீரு அவரை சண்டை காட்சிகளிலும் நடிக்க வைத்தார். இதன் மூலம் அவருக்கு பணம் வரத் தொடங்கியுள்ளது.
1983-ம் ஆண்டில், சன்னி தியோல் நடித்த ‘பேத்தாப்’ படத்தில் டூப் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றினார். இதற்காக அவருக்கு ரூ.500 சம்பளம் கிடைத்தது. இது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
புற்றுநோயுடன் போராட்டம்
லடாக்கில் ‘லக்ஷ்யா’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, ஷாமுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
பரிசோதனையில், அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தனது குடும்பத்திற்கு தெரியாமல் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
அப்போது, தனது இரண்டு குழந்தைகளையும் வளர்க்க தனக்கு இன்னும் 10 வருடங்கள் அவகாசம் வேண்டும் என கண்ணீர் விட்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டாராம். பல அறுவை சிகிச்சைகளையும், உடல் வலிகளையும் தாண்டி, இறுதியில் அவர் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தார்.
வெற்றிக் குடும்பம்
ஷாம் கௌஷல் தற்போது பாலிவுட்டின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநராக உயர்ந்துள்ளார். அவரது இரண்டு மகன்களும் நடிகர்களாக ஜொலிக்கின்றனர்.
மூத்த மகன் விக்கி கௌஷல், தற்போது பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் ஒருவர். விக்கியின் மனைவி வேறு யாருமல்ல, நடிகை கத்ரீனா கைஃப்.
சமீபத்தில் விக்கி நடித்த 'சாவா' திரைப்படம் உலகளவில் ரூ.800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இது விக்கிக்கு மட்டுமல்ல, கௌஷல் குடும்பம் முழுவதற்கும் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது. ஷாம் கௌஷலின் கடின உழைப்பும், விடாமுயற்சியும் அவரது குடும்பத்தை இன்று இந்த உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |