வேலையும் கிடையாது., சம்பளமும் கிடையாது., ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மீது பிரெஞ்சு அரசு அதிரடி நடவடிக்கை!
COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போட தவறியதற்காக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கான சுகாதார வல்லுநர்கள் ஊதியம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், பிரான்சின் தேசிய பொது சுகாதார அமைச்சகம் சுமார் 12% மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் 6% தனியார் பயிற்சி மருத்துவர்கள் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்று மதிப்பிட்டது.
அதனைத் தொடர்ந்து, இதுவரை தடுப்பூசி போடப்படாத சுகாதார மையங்கள் மற்றும் கிளினிக்குகளில் உள்ள சுமார் 3,000 ஊழியர்கள் இடைநீக்கம் அறிவிக்கப்பட்டதாக பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியர் வேரன் (Olivier Veran) தெரிவித்துள்ளார்.
பிரான்சில், மருத்துவம், வீட்டு பராமரிப்பு மற்றும் அவசர தொழில் நிபுணர்கள் குறைந்தபட்சம் தங்களுக்கான முதல் டோஸ் தடுப்பூசியாவது பெறுவதற்கு புதன்கிழமை வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதனை சிலர் செய்ய தவறியதால், அவர்கள் அனைவரும் சம்பளம் இல்லாமல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் நிலையில், தற்போது சுமார் 70 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு தேவையான இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் - இது உலகின் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும்.