303 பயணிகளுடன் நிறுத்தப்பட்ட விமானம்.. 3 நாட்களுக்கு பிறகு பிரான்சில் இருந்து புறப்பட அனுமதி
மனித கடத்தல் புகாரின் அடிப்படையில் 303 பயணிகளுடன் பிரான்சில் 3 நாள்களாக தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் அங்கிருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
300 பயணிகளுடன் நிறுத்தப்பட்ட விமானம்
துபாயிலிருந்து மத்திய அமெரிக்க நாடான நிகாரகுவாவுக்கு 303 இந்திய பயணிகளுடன் சென்ற 'ஏ-340’ என்ற விமானம், கடந்த 22 -ம் திகதி திடீரென பிரான்சின் வட்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது.
முதலில், எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் தரையிறக்கப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், பின்பு மனிதக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின.
பின்னர், விமான பயணிகள் அனைவரையும் விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இரண்டு நாள்களாக தங்கவைக்கப்பட்டனர். அதில் இருந்து இருவரை பிரான்ஸ் நாட்டு பொலிஸ் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்படி, விமான பயணிகள் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
விமானம் புறப்பட அனுமதி
இதனைத்தொடர்ந்து, பிரான்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தி, இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். இதனிடையே, விமானத்தில் பயணித்தவர்கள் நிகாரகுவாவுக்கு சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா, கனடா நாட்டிற்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனால், இந்த தகவலின் அடிப்படையிலும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், 303 இந்தியர்களுடன் தடுத்து வைக்கப்பட்ட விமானம் பிரான்சை விட்டு இன்று வெளியேறலாம் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த விமானம் நிகாரகுவா செல்லுமா அல்லது எங்கு தரையிறங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |