லண்டனில் துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய கேரளச் சிறுமி வழக்கு: குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறை
லண்டனில், உணவகம் ஒன்றின்மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, தவறுதலாக சுடப்பட்ட அப்பாவிச் சிறுமி வழக்கில் குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய கேரளச் சிறுமி
கடந்த ஆண்டு, மே மாதம் 29ஆம் திகதி, இரவு 9.20 மணியளவில், லண்டனில், Hackney என்னுமிடத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தன் தந்தை மற்றும் தாயுடன் உணவருந்திகொண்டிருந்திருந்திருக்கிறாள், கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ஒரு 9 வயது சிறுமி.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த தனது எதிரிகளான மூன்று பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அவர் சுட்டதில் ஒரு குண்டு உணவகத்துக்குள் உணவருந்திக்கொண்டிருந்த அந்தச் சிறுமி மீது பாய்ந்துள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்ட நாஸர் அலி (43), கேனான் அய்தோக்டு (45) மற்றும் முஸ்தபா கிஸில்டன் (35) ஆகியோருடன், அந்தச் சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
அந்தச் சிறுமியின் மண்டை ஓடு சேதமடைந்ததால், அவளது மண்டை ஓட்டின் ஒரு பகுதிக்கு பதிலாக, பிளாட்டினம் தகடு பொருத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவள் மீது பாய்ந்த குண்டு இன்னமும் அவளது மூளைக்குள்ளேயே இருப்பதால், அதன் பக்க விளைவுகளை அவள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டியிருக்கும்.
குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
இந்த வழக்கில் தற்போது ஒரு குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் அந்தச் சிறுமியை துப்பாக்கியால் சுட்டவர் அல்ல. அவரது பெயர் Javon Riley (33). உண்மையில் அது இரண்டு குழுக்களுக்கு இடையில் நடந்த மோதல். அதில், அந்தச் சிறுமி மீது தவறுதலாக குண்டு பாய்ந்துவிட்டது.
துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பி ஓடும்போது, அவரை தனது காரில் ஏற்றிச் சென்று காப்பாற்றியதுடன், அவரது துப்பாக்கியையும் எங்கோ வீசிவிட்டார் இந்த Riley. துப்பாக்கியால் சுட்ட அந்த நபரும் இதுவரை சிக்கவில்லை, துப்பாக்கியும் கிடைக்கவில்லை.
மேலும், துப்பாக்கிச்சூட்டுக்கு முன் கார் ஒன்றைத் திருடி, எதிர் தரப்பினர் அந்த ஹொட்டலுக்கு வருவதை உறுதி செய்வதற்காக பல நாட்கள் அந்தப் பகுதியில் சுற்றி வேவு பார்த்துள்ளார் Riley.
ஆக, அந்த தாக்குதல்தாரிக்கு உதவியதற்காகத்தான் Rileyக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |