பெருந்தொகை நிதியை விரயம் செய்த கல்வி அமைச்சு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஸ்மார்ட் முறைக் கற்பித்தலுக்கான 340 கோடி ரூபா பெறுமதியான உபகரணங்களை கல்வி அமைச்சு விரயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சினால் 2019ஆம் ஆண்டு 340 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட டெப் கணனிகள் மற்றும் அதற்கான சார்ஜிங் கருவிகள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவில் (கோபா கமிட்டி) தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வி முகாமைத்துவ தரவு அமைப்பில் (NEMIS) 6 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்ட போதிலும், அதில் போதுமான தரவுகள் உள்ளீடு செய்யப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.
பிரான்ஸின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்திற்கு ஒரு அலுவலக உதவியாளரை நிரந்தரமாக நியமித்து 13 ஆண்டுகளாக அவருக்கான கடமைகளை வரையறை செய்யாது, வெறுமனே 6 கோடிக்கு மேல் பணம் சம்பளமாக செலுத்தப்பட்டது குறித்தும் கோபா குழு கவனம் செலுத்தியுள்ளது.
2019/2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் கல்வி அமைச்சின் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் அரசாங்கக் கணக்குக் குழு நாடாளுமன்றத்தில் கூடிய போது இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெப் கணனிகளின் உத்தரவாத (வொரண்டி) காலம் முடியும் வரை சில டெப்கள் விநியோகிக்கப்படவில்லை என்பதுடன் விநியோகிக்கப்பட்ட டெப் கணனிகளில் பெரும்பாலானவை செயலிழந்துள்ளதாகவும், சிலவற்றைக் காணவில்லை எனவும் கோபா குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
முறையற்ற விநியோகம்
இந்த டெப் கம்ப்யூட்டர்கள் நியாயமான முறையில் விநியோகிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளமையால் இது தொடர்பான முழுமையான அறிக்கையை செப்டம்பர் 26ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு கோபா குழு பரிந்துரைத்துள்ளது.
இது மட்டுமன்றி உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் வருகை விகிதம் குறைந்தபட்ச அளவில் இருப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டு இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 15 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா, அசோக் அபேசிங்க, ஜயந்த கெடகொட, சிவஞானம் ஸ்ரீதரன், ஹெக்டர் அப்புஹாமி, கலாநிதி மேஜர் பிரதீப் உந்துகொட, முதித பிரிஷாந்தி மற்றும் மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.