இந்தியா - ரஷ்யா இணைந்து உருவாக்கிய அதிவேக BrahMos ஏவுகணையை வாங்க 3 நாடுகள் ஆர்வம்
இந்தியா மற்றும் ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 3 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
3 நாடுகள் ஆர்வம்
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ் (BrahMos) பிரபலமடைந்து வருகிறது.
சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடி வரும் பிலிப்பைன்சுக்கு, பிரம்மோஸ் ஏவுகணையை ஏற்கனவே இந்தியா வழங்கியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyeniya ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் அதிநவீன, சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை பிரம்மோஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பிரம்மபுத்திரா நதி மற்றும் ரஷ்யாவில் உள்ள மோஸ்க்வா நதியின் பெயரை தழுவி பிரம்மோஸ் ஏவுகணைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணையானது இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று ஆயுதப் பிரிவுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை வாங்குவதற்கு பல நாடுகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், இந்த ஏவுகணையை வாங்குவதற்கு ரூ.3,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் நாடு கையெழுத்திட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலில் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கிய நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.
இந்நிலையில், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் BrahMos ஏவுகணையை வாங்க ஆர்வமாக உள்ளதாக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் மாக்சிசேவ் ரஷ்ய செய்தி நிறுவனத்திடம் (டாஸ்) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த மூன்று நாடுகளுடன் பிரம்மோஸ் ஏவுகணைகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |