வெளிநாடு சுற்றுலா சென்ற ஜேர்மன் குடும்பம் பலியான விவகாரம்: 4 பேருக்கு சிறை
ஜேர்மன் குடும்பம் ஒன்று துருக்கிக்கு சுற்றுலா சென்ற நிலையில், குடும்பமே உடல் நலம் பாதிக்கப்பட்டு பலியான விடயம் நினைவிருக்கலாம்.
அந்த வழக்கு தொடர்பில் 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா சென்ற குடும்பமே பலியான விவகாரம்
கடந்த ஆண்டு, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த Servet (38), அவரது மனைவியான Cigdem Bocek (27), பிள்ளைகள் Masal (3) Kadir Muhammet (6), ஆகியோர், துருக்கி நாட்டிலுள்ள இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.

பல இடங்களை சுற்றிப் பார்த்த அந்தக் குடும்பத்தினர், Ortakoy என்னும் பிரபல சுற்றுலாத்தலத்தில் அமைந்துள்ள தெருவோரக் கடைகளில் விற்கப்படும் பிரபல உணவு வகைகளை சுவைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அவர்களுடைய உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படவே, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
ஆனால், முதலில் பிள்ளைகள், அடுத்து தாய், பின்னர் தந்தை என மொத்தக் குடும்பமும் பலியாகிவிட்டது.
அவர்கள் பல்வேறு தெருவோரக் கடைகளில் பல உணவுகளை சுவைத்த நிலையில், அந்த உணவுகளில் ஏதோ ஒன்றுதான் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட காரணம் என முதலில் கருதப்பட்டது.
ஆனால், Servet குடும்பம் தங்கியிருந்த ஹொட்டலில் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்காக பூச்சி மருந்து அடிக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், அந்த பூச்சிக்கொல்லி மருந்திலிருந்து வெளியான நச்சுக் காற்றே Servet குடும்பம் பலியாகக் காரணம் என உறுதிசெய்யப்பட்டது.
4 பேருக்கு சிறை
Servet குடும்பம் உயிரிழந்த வழக்கில், அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலின் உரிமையாளர் உட்பட 4 பேருக்கு தற்போது சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஹொட்டல் உரிமையாளரான Hakan Oglak என்பவருக்கு 13 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனையும், பூச்சிமருந்து விற்ற மருந்தக உரிமையாளரான Zeki Kisi மற்றும் அவரது மகன் Serkan Kisi ஆகியோருக்கு 18 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹொட்டலில் பூச்சி மருந்து அடித்த பூச்சிக் கட்டுப்பாட்டு அலுவலரான Dogan Cagferoglu என்பவருக்கு 12 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த பூச்சிக் கட்டுப்பாட்டு அலுவலரான Dogan Cagferoglu, முறைப்படி உரிமம் பெறாத பணியாளர் ஆவார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |