கனடாவின் ஆயுதப்படை தளத்தில் தீ: 4 வீரர்கள் பரிதாபமாக பலி: உறுதிப்படுத்திய கனேடிய பிரதமர்
4 Soldiers Killed in Alberta Military Base Fire: கனடாவின் ஆயுதப்படை தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்து காரணமாக 4 வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக கனேடிய பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆயுதப்படை தளத்தில் வெடிப்பு விபத்து
சனிக்கிழமை கனடாவின் எட்மன்டனுக்கு கிழக்கே வெய்ன்ரைட் ஆயுதப்படை தளத்தில் வெடிப்பு மற்றும் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.
வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் தீயை அணைக்க கடும் சவால்கள் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் நடைபெற்று வந்த ஆல்பர்ட்டா பொதுவாக்கெடுப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு அங்கிருந்த வாக்குப்பதிவு மையமும் உடனடியாக மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காட்சிகளில், ராட்சத அளவிலான கரும்புகை வானில் எழும்பும் காட்சிகள் பார்க்க முடிகிறது.
4 வீரர்கள் உயிரிழப்பு
இந்நிலையில் கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள வேய்ன்ரைட் கனேடிய ஆயுதப்படை தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீரர்கள் வரை உயிரிழந்து இருப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் நம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரமான வீரர்களை இழந்து முழு நாடும் துக்கத்தில் ஆழ்ந்து இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் டஜன் கணக்கானோர் பலத்த காயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.