இதுவரை 40 சிறார்கள்... பிரித்தானியாவில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை
பிரித்தானியாவில் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறைந்தது 40 குழந்தைகள் இறந்துள்ளதாக புதிய தரவுகளில் தெரியவந்துள்ளன.
Strep A பாதிப்பு எண்ணிக்கை
இங்கிலாந்தில் 18 வயதுக்கு உட்பட்ட 32 சிறார்கள் Strep A பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். Strep A பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஜனவரி 12ம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில், 10 வயதுக்குட்பட்ட இளையோர்களில் மூன்று பேர் Strep A பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். வேல்ஸ் பகுதியில் 15 வயதுக்கு உட்பட்ட ஐவர் பலியாகியுள்ளனர். மட்டுமின்றி, வடக்கு அயர்லாந்தில் மூன்று சிறார்கள் பலியானதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
சமீப வாரங்களாக Strep A பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக UKHSA அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2017- 2018 காலகட்டத்தில் Strep A பாதிப்புக்கு மொத்தம் 354 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
நிபுணர்கள் தரப்பில் கவலை
இதில் 18 வயதுக்கு உட்பட்ட 27 சிறார்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதுவரை 262 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை சத்தமின்றி அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஸ்கார்லெட் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் கவலைப்படும் அளவுக்கு எண்ணிக்கை இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
செப்டம்பர் 12 முதல் பிப்ரவரி 12 வரை 44,478 பேர்களுக்கு ஸ்கார்லெட் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 2017- 2018 காலகட்டத்தில் 30,768 பேர்கள் ஸ்கார்லெட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.