ஒரே நாளில் 40,953 புதிய தொற்றுகள், 188 இறப்புகள்: இந்தியாவில் மீண்டும் தலைவிரிக்கும் கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40,953 புதிய கோவிட் -19 தொற்றுகள் மற்றும் 188 இறப்புகள் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,15,55,284-ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,59,558-ஆகவும் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை பதிவாகியுள்ள 40,953 புதிய தொற்றுகள், கடந்த நான்கு மாதங்களில் பதிவாகியுள்ள அதிகபட்ச தினசரி பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதில் மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்கள் அதிகமான பாதிப்புகளை பதிவு செய்து முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் மட்டும் 25,681 தொற்று பதிவாகி மொத்த எண்ணிக்கையில் 60 சதவீதத்தை கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,243 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது மற்றும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த மூன்று நாட்களாகவே 30,000க்கும் அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இது நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைவிரிக்கத் தொடங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.