பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: 139 பேரை கைது செய்த பொலிஸார்
Dozens arrested for supporting Banned Palestine Group: பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பாலஸ்தீன ஆக்சன் அமைப்புக்கு ஆதரவாக திரண்ட மக்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக திரண்ட மக்கள்
லண்டனின் நைன் எல்ம்ஸ் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆக்சன்(Palestine Action) என்ற அமைப்பிற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
இந்த பாலஸ்தீன ஆக்சன் அமைப்பானது பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபடுவதோ பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.

இது தொடர்பாக பொலிஸார் முன்னரே எச்சரித்து இருந்த நிலையில், அமெரிக்க தூதரகத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட 139 பேரை மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதைப்போன்று எடின்பரோவில் உள்ள ஹோலிரூட் பகுதிக்கு அருகே அமைந்த அமெரிக்க தூதரகத்திற்கு வெளியிலும் இதுபோன்ற மற்றொரு போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன், பாலஸ்தீன ஆக்சன் அமைப்பை ஆதரிக்கிறேன்” என்ற பதாகைகளை ஏந்தி நிற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் பாலஸ்தீன ஆக்சன் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.