அரை நூற்றாண்டுக்கு பிறகு... ஓவலில் இங்கிலாந்தை புரட்டிப்போட்ட இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் சிறப்பான கம்பேக் கொடுத்து 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஆட்டத்தின் முதல் நாளன்றே தடுமாறிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது.
அதிகபட்சமாக அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் விளாசினர். இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நிலை வேகமாக சரிந்ததால் 67 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்கள் வீழ்ந்தது.
இதன் பின்னர் வந்த ஒல்லி போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அரைசதம் விளாசி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினர். இதனால் அந்த அணி 291 ஓட்டங்கள் எடுத்தது. 101 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்தது.
தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 127 ஓட்டங்களும், கே.எல்.ராகுல் 46 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் புஜாரா(61), கோஹ்லி(41), பண்ட்(50), ஷர்துல் தாக்கூர்(60) ஓட்டங்கள் விளாச இந்திய அணி 466 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ரோரி பேர்ன்ஸ்(50) - ஹசீப் ஹமீத் (63) ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 100 ஓட்டங்களை சேர்த்தனர். ஆனால் பின்னர் வந்த எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை.
டேவிட் மாலன் 5 ரன்களுக்கும், ஒல்லி போப் 2 ரன்களுக்கு அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் பலமாக இருந்த பேர்ஸ்டோ, மொயின் அலி இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். கடைசியாக அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த அணித் தலைவர் ஜோ ரூட் 36 ஓட்டங்களுக்கு நடையை கட்டினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 210 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை விழ்த்தினர். இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை பெற்றது.