புதிய வகை தொற்றால் தமிழகத்தில் 5,000 பேர் பாதிப்பு
பரவி வரும் ஸ்கரப் டைபஸ் தொற்றால் தமிழகத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்கரப் டைபஸ் தொற்று
தமிழகத்தில் தினமும் 10 முதல் 20 பேர் ஸ்கரப் டைபஸ் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். மொத்தமாக இதுவரை தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளிலும், கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பரவி வருகிறது.
ஸ்கரப் டைபஸ் தொற்று என்பது ஒருவகையான பாக்டீரியா தொற்றாகும். ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் ஆகியவை மனிதர்களை கடிக்கும்போது இந்த தொற்று ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் ஆகும்.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை கூறுகையில், "விவசாயிகள், வனப் பகுதிகளுக்கு அருகே வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணிகள் மற்றும் பூச்சிக் கடிக்குள்ளாகும் நபர்களுக்கு ஸ்கரப் டைபஸ் தொற்று ஏற்படுகிறது.
இதனை எலிசா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனை மூலமாக கண்டறியலாம். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்ட்டி-பயாடிக் மருந்துகளை அளித்து சிகிச்சை மேற்கொள்ளலாம்.
அதன் பிறகும் உடல்நலம் சரியாகவில்லை என்றாலோ, இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டாலோ, ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.
தேவைப்படும் நேரத்தில் உயர் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். பூச்சி கடித்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |