அமேசான் சரக்கு விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
5 dies in amazon cargo plane crash in miami airport: மியாமி சர்வதேச விமான நிலையத்தில், அமேசான் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமேசான் சரக்கு விமான விபத்து
அமேசான் நிறுவனத்தின் போயிங் 767-300 ரக சரக்கு விமானம் இன்று புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் உள்ள லூயிஸ் முனோஸ் மரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த விமானமானது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அதைத்தொடர்ந்து, விமான நிலையத்தின் மூலைவிட்ட ஓடுபாதையைத் தாண்டிச் சென்று, தரையில் இருந்த பல வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாகனத்தின் மீது மோதியதில் தீப்பற்றி கரும்புகை எழுந்துள்ளது. 60 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த உடனேயே விமான நிலையம் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியது. இதனால் சுமார் 250 விமானங்கள் தாமதமாகியுள்ளது.
விபத்துக்குள்ளான இந்த விமானம், 32 ஆண்டுகள் பழமையான போயிங் 767-300 சரக்கு விமானம் என்றும், அது 1994 முதல் 2015 வரை பல்வேறு விமான நிறுவனங்களுக்குப் பயணிகள் விமானமாகச் செயல்பட்டு வந்தது எனவும், 2015ம் ஆண்டுக்குப் பின் சரக்கு விமானமாக மாற்றப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், "எந்தவொரு விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என தெரிவித்துள்ளது.
இந்த ஓடுபாதை விலகல் விபத்து குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம் என NTSB தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |