சொற்ப தொகைக்கு எடுக்கப்பட்டு.,ஐபிஎல் 2025யில் வியக்க வைத்த ஐவர்
ஐபிஎல் 2025 தொடரில் குறைந்த தொகையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர்கள் சிலர், பார்வையாளர்கள் உட்பட பலரையும் தங்களது ஆட்டத்தினால் மிரட்டியுள்ளனர்.
இளம்வீரர்கள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரை இளம்வீரர்களை ஏலத்தில் எடுப்பது உற்றுநோக்கப்படும்.
ஏனெனில், குறைந்த தொகைக்கு எடுக்கப்படும் இளம் வீரர்கள்தான் மிகப்பெரிய மாற்றத்தை தொடரில் ஏற்படுத்துவர்.
அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 5 வீரர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதுடன், சாதனைகளையும் படைத்துள்ளனர்.
திக்வேஷ் சிங் ரத்தி:
இந்த சீஸனில் இவர் ரூ.30 லட்சத்திற்கு லக்னோ அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் சுழற்பந்துவீச்சில் மிரட்டிய திக்வேஷ் ரத்தி (Digvesh Rathi) கடைசியாக விளையாடிய இரு போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை.
ஆனாலும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் திக்வேஷ் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அனிகேத் வர்மா:
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அனிகேத் வர்மாவை (Aniket Verma) ரூ.30 லட்சத்திற்கு வாங்கியது. இவர் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றே கூறலாம்.
அணி சறுக்கும் நேரத்தில் இவர் களமிறங்கி சிக்ஸர்களை பறக்கவிட்டு காப்பாற்றியிருக்கிறார். அதிரடியாகவும், நேர்த்தியாகவும் துடுப்பாடும் அனிகேத் 10 போட்டிகளில் 193 ஓட்டங்களை குவித்திருக்கிறார். நடப்பு சீசனில் 16 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.
விக்னேஷ் புத்தூர் (Vignesh Puthur)
சுழற்பந்து வீச்சில் மிரட்டும் வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் விக்னேஷ் புத்தூர் (Vignesh Puthur) இருந்து வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள விக்னேஷ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நிலைகுலைய வைத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக தற்போது தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அஸ்வானி குமார்:
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு படைக்கு பலம் சேர்க்கும் விதமாக இணைந்தவர்தான் அஸ்வானி குமார் (Ashwani Kumar).
முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆச்சரியப்பட வைத்த இவர், 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
நடப்பு சீசனில் இவர் ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளரான இவர், 140.7 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடியவர்.
ஆயுஷ் மாத்ரே:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு மாற்றாக களமிறங்கியவர் ஆயுஷ் மாத்ரே (Ayush Mhatre). அதிரடியாக ஆடக்கூடிய இவர் 4 போட்டிகளில் 163 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மாத்ரே தொடக்க வீரராக களமிறங்கி, 48 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 94 ஓட்டங்கள் விளாசினார். இவரது வரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலம் சேர்த்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |