சென்னையில் பயன்பாட்டிற்கு வர உள்ள குடிநீர் ஏடிஎம் - எப்படி செயல்படும்?
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் வெளியில் செல்லும் போது குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.
குடிநீர் ஏடிஎம்
இதனை போக்க, சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 50 பகுதிகளில், குடிநீர் ஏடிஎம் அமைக்க சென்னை மாநகராட்சி முன்வந்துள்ளது.
பட்டினபாக்கம், சிவன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா உள்ளிட்ட 40 இடங்களில் இதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும், 10 இடங்களில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை திறந்து வைக்க உள்ளார்.
எப்படி செயல்படும்?
இந்த ஏடிஎம்களில் 24 மணி நேரமும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட தூய்மையான குடிநீர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாட்டில்கள் மூலம் 150மிலி மற்றும் 1 லிட்டர் ஆகிய 2 அளவுகளில் குறைந்த விலையில் குடிநீரை பெற்றுக்கொள்ளலாம்.
தொட்டியில் நீரின் அளவு குறையும்போது எச்சரிக்கை சமிக்ஞை காண்பிக்கப்படும். இந்த விநியோக அமைப்பு பேட்டரி மூலம் இயங்குகிறது.
கட்டணம் செலுத்த ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களையும் பயனர்கள் பார்க்க முடியும். நீர் ரீசார்ஜ் மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்கள் SMS மூலம் பயனர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |