பிரித்தானியாவில் அறிமுகமாகும் 50 புதிய சட்டங்கள்: உள்துறைச் செயலரின் சூளுரை
பிரித்தானியாவில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக 50 புதிய சட்டங்கள் அறிமுகமாகும் நிலையில், பிரித்தானியாவை சமுதாய விரோத போக்கு, குண்டர்கள் மற்றும் கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்போவதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் சூளுரைத்துள்ளார்.
அறிமுகமாகும் 50 புதிய சட்டங்கள்
சமுதாயத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குற்றச்செயல்களான கத்தி மூலம் தாக்கும் குற்றச்செயல்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறை, சைபர் குற்றங்கள், சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தீவிரவாதம் ஆகிய குற்றச்செயல்களுக்கு எதிரான, The Crime and Policing Bill என்னும் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மசோதாவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய நடவடிக்கைகள்
சமுதாய விரோத நடவடிக்கைகள்
சமுதாய விரோத நடவடிக்கைகளில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவோர், மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
அதற்கு மறுப்பு தெரிவிப்பது குற்றச்செயலாக கருதப்படும். அத்துடன், மோட்டார் சைக்கிள்கள் மின்சார ஸ்கூட்டர்கள் முதலான வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்படும்.
கத்தி மூலம் தாக்கும் குற்றச்செயல்கள்
தனியார் கட்டிடங்களுக்குள் இருக்கும் கத்தி போன்ற ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவும், அழிக்கவும் பொலிசாருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு இதுபோல் ஆயுதங்கள் விற்பனை செய்பவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.
தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் ஆயுதங்கள் வைத்திருந்தாலே இனி நான்கு ஆண்டுகள் சிறை செல்ல நேரிடும்.
கடைக்காரர்களை தாக்குதல்
கடைக்காரர்களைத் தாக்குவது இனி குற்றச்செயல், அத்துடன், 200 பவுண்டுகளுக்கு குறைவான பொருட்களை கடைகளில் திருடுவதும் இனி குற்றம்.
துஷ்பிரயோகம்
குழந்தைகளை வேலைக்கு எடுக்கும் குண்டர்களைக் குறிவைத்து புதிய சட்டம் ஒன்று அறிமுகமாக உள்ளது.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அனுமதியில்லாமல் அந்தரங்க புகைப்படங்கள் எடுப்பதும் வீடியோ எடுப்பதும் இனி குற்றம்.
பானங்களில் மயக்கமருந்து அல்லது போதைப்பொருள் கலப்பது, ஒருவரை தொடர்ந்து நேரிலோ, மொபைல் மூலமோ தொல்லை கொடுப்பது ஆகிய குற்றங்களுக்கெதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட உள்ளன.
பொலிசாருக்கு கூடுதல் அதிகாரம்
மொபைல் போன்ற பொருட்களை திருடி வைத்திருப்போரின் வீடுகளை வாரண்ட் இல்லாமலே சோதனையிட பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
ஆர்ப்பாட்டங்கள்
ஆர்ப்பாட்டங்களின்போது பட்டாசுகள், flare போன்ற விடயங்களை வைத்திருக்கவே தடை. போர் நினைவிடங்கள் மீது ஏறுவது குற்றம், மற்றும் ஆர்ப்பாட்டங்களின்போது முகத்தை மறைக்கத் தடை ஆகிய நடவடிக்கைகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |