யூடியூப் பார்த்து பயிற்சி எடுத்து எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்த 59 வயது கேரளப் பெண்
கேரளாவைச் சேர்ந்த 59 வயது பெண்ணொருவர், முறையான பயிற்சி இல்லாமலே, எவரெஸ்டின் அடிவார முகாம் அல்லது அடிப்படை முகாமை சென்றடைந்துள்ளார்.
யார் அந்தப் பெண்?
கேரளாவிலுள்ள கண்ணூரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் வசந்தி செறுவீட்டில் (Vasanthi Cheruveettil).
பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, நேபாளத்தில் தனது ட்ரெக்கிங்கை துவங்கிய வசந்தி, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி தெற்கு அடிப்படை முகாமை (South Base Camp) அடைந்துள்ளார்.
யூடியூப் பார்த்து, தினசரி 5 முதல் 6 கிலோமீற்றர் தூரம் ட்ரெக்கிங் பூட்ஸ் அணிந்து நான்கு மாதங்கள் நடந்து பயிற்சி எடுத்து, மற்றவர்களுடன் பேசிப்பழக ஹிந்தி மொழியும் கற்று தனது பயணத்தைத் துவங்கியுள்ளார் வசந்தி.
பயணம் ஒன்றும் எளிதாக இல்லை, செங்குத்துப் பாறைகள், ஒடுக்கமான வழி பெரிய பள்ளத்தாக்குகள் என கையில் குச்சி ஒன்றுடன் மெதுவாக நடந்து நடந்து தெற்கு அடிப்படை முகாமை அடைந்துவிட்டார் வசந்தி.
தெற்கு அடிப்படை முகாமில், பாரம்பரிய புடவை அணிந்து, கையில் இந்திய தேசியக் கொடியுடன் வசந்தி நிற்கும் புகைப்படங்கள் பலரது உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளன.
சரி, இந்த பயணத்துக்கான செலவுக்கு என்ன செய்கிறார் வசந்தி? வசந்தி ஒரு தையல்காரர். துணி தைத்து சேமித்த பணத்துடன், தன் பிள்ளைகளும் உதவ, தனது கனவை நிறைவேற்றியுள்ளார் வசந்தி.
ஆனால், அவரது கனவு இத்துடன் முடிந்துவிடவில்லை. அடுத்ததாக, சீனப்பெருஞ்சுவரை அடையும் திட்டத்தில் இருக்கிறார் வசந்தி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |