ஐபிஎல் தொடரில் சிக்ஸ் அடித்தால் ரூ.5 லட்சம் - பிசிசிஐ வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் தேவ்தத் படிக்கல் சூப்பரான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது.இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்ய அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 55, ஜோஸ் பட்லர் 35, ஹெட்மேயர் 32, தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களின் அதிரடியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து பேட் செய்த ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி லைனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டாடா பஞ்ச் என்ற போர்டில் பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து பட்டால் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து இதுவரை யாரும் அடிக்காத நிலையில் நேற்று நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் தேவ்தத் படிக்கல் அடித்த சிக்ஸர் அந்த பலகையில் பட்டதால் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.