மேற்கிந்திய தீவுகள் அணியை சூறையாடிய சூழல் வீரர்கள்.! அசால்ட்டாக தட்டித்தூக்கிய இந்தியா
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அசத்திய இந்திய அணி, 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசால்டாக வெற்றி பெற்று, தொடரை 4-1 என வென்று, கோப்பை கைப்பற்றியது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் மோதின. இதில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 3-1 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. முக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில் நாணயசுழற்சியை வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் துடுப்பாட முடிவு செய்தார்.
இந்திய அணிக்கு துவக்கத்தில் இஷான்(11) ஏமாற்றினார். பின் ஸ்ரேயாஸ், தீபக் ஹூடா அசத்தினர். ஓடியன் ஸ்மித் ஓவரில் ஸ்ரேயாஸ் வரிசையாக இரண்டு சிக்சர் விளாசினார். மறுபக்கம் வால்ஷ் பந்தை ஹூடா சிக்சருக்கு அனுப்ப, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பாவெல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்ரேயாஸ், அரைசதம் கடந்தார்.
மெக்காய் வீசிய போட்டியின் 11வது ஓவரில் ஹூடா(ஒரு பவுண்டரி, சிக்சர்), ஸ்ரேயாஸ்(ஒரு பவுண்டரி) வெளுத்து வாங்க, மொத்தம் 17 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. வால்ஷ் பந்துவீச்சில் ஹூடா 38 ஓட்டங்களில் வெளியேறினார். ஜேசன் ஹோல்டர் வேகப்பந்தில் ஸ்ரேயாஸ் 64 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
போட்டியின் 15-வது ஓவரில் கடும் மின்னல் காரணமாக, ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின் ஆட்டம் தொடர்ந்தது. சஞ்சு சாம்சன்(15) நிலைக்கவில்லை. கடைசி கட்டத்தில் கலக்கிய தினேஷ் கார்த்திக்(12), டிரேக்ஸ் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார்.
ஹோல்டர் வீசிய போட்டியின் 19வது ஓவரில், ஹர்திக் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 19 ஓட்டங்கள் கிடைத்தன. கேப்டன் ஹர்திக் 28 ஓட்டங்கள் அடித்த நிலையில் ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் ஓடியன் ஸ்மித் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார் அக்சர் படேல்(9). இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஓடியன் ஸ்மத், 3 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய 'சுழலில்' சிதறியது. அக்சர் வலையில் ஹோல்டர்(0), புரூக்ஸ்(13), டேவோன் தாமஸ்(10) சிக்கினர். குல்தீப்பிடம் கேப்டன் பூரன்(3), டிரேக்ஸ்(1), ஓடியன் ஸ்மித்(0) சரண்டர் ஆகினர்.
தனிநபராக போராடிய ஹெட்மயர் அரைசதம் கடந்தார். பிஷ்னோய் பந்துவீச்சில் பாவெல்(9), கீமோ பால்(0), ஹெட்மயர்(56), மெக்காய்(0) அவுட்டாகினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவரில் 100 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
இந்தியா சார்பில் பிஷ்னோய் 4, அக்சர், குல்தீப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இப்படி சூழல் பந்துவீச்சாளர்கள் 10 விக்கெட்டையும் கைப்பற்றுவது சர்வதேச டி20 வரலாற்றில் முதல் முறையாக அரங்கேறியது. ஆட்ட நாயகன் விருதை அக்சர் படேலும், தொடர் நாயகன் விருதை அர்ஷ்தீப் சிங்கும் வென்றனர்.