உக்ரைன் ரஷ்யப் போருக்கு தப்பியோடிய ஆறு ரஷ்ய வீரர்களுக்கு விசா அளித்துள்ள பிரான்ஸ்
உக்ரைன் ரஷ்யப் போருக்குத் தப்பியோடிய ஆறு ரஷ்ய வீரர்களுக்கு, பிரான்ஸ் நாடு விசா அளித்துள்ளது.
முதன்முறையாக நிகழ்ந்துள்ள விடயம்
உக்ரன் ரஷ்யப் போருக்குத் தப்பியோடிய ஆறு ரஷ்ய வீரர்கள் பிரான்ஸ் நாட்டில் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர்.
அவர்களுக்கு பிரான்ஸ் தற்காலிக விசா அளித்துள்ளது.
இப்படி ரஷ்ய உக்ரைன் போருக்குத் தப்பி வரும் ரஷ்ய வீரர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்று விசா அளிப்பது இதுவே முதல் முறை என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், இந்த வீரர்கள் எடுத்துள்ள முடிவு, மேலும் பல வீரர்கள் போரிலிருந்து தப்பிவர வழிவகை செய்யலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
நான் பிரான்சில் கால் வைத்தபோது, முதன்முறையாக என்னால் முழுமையாக சுவாசிக்க முடிந்தது என்று கூறும் அலெக்சாண்டர் என்னும் ரஷ்ய வீரர், மோசமானவற்றை பின்னால் விட்டு விட்டு, ஒரு அமைதியையும் சுதந்திரத்தையும் என்னால் உணர முடிந்தது என்கிறார்.
அலெக்சாண்டர், உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ஒரு முன்னாள் ஒப்பந்த வீரர் ஆவார்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே, பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரிட மேலதிகாரிகள் கட்டளையிட்டதற்கு கீழ்ப்படிய மறுத்ததும், தப்பியோடிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக, அத்தகைய வீரர்கள் தப்பியோட உதவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
பல ரஷ்ய வீரர்கள் போரிலிருந்து தப்பியோடினாலும், அவர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள அர்மீனியா, கஸகஸ்தான் போன்ற நாடுகளுக்குத்தான் தப்பியோடியுள்ளார்கள்.
பிரச்சினை என்னவென்றால், அவர்களை ரஷ்ய அதிகாரிகள் எளிதாக பிடித்து மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டுசென்ற சம்பவங்களும் பல நிகழ்ந்துள்ளன.
ஆக, முதன்முறையாக, அவர்கள் தப்பி பிரான்சுக்கே வந்துள்ள சம்பவம் இப்போதுதான் நிகழ்ந்துள்ளது.
ஆனால், பிரான்சின் முடிவு ரஷ்யாவை கோபப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |