போலி ஆவணங்களுடன் பிரித்தானியா செல்ல முயன்ற ஆறு பேர்... விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்த புலம்பெயர்தல் அதிகாரிகள்
இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆறு பேர் போலி ஆவணங்களுடன் பிரித்தானியாவுக்குச் செல்வதற்காக விமானம் ஏறச் செல்லும்போது, புலம்பெயர்தல் அதிகாரிகள் அவர்களை மடக்கிப் பிடித்தார்கள்.
அந்த ஆறு பேரும் வைத்திருந்த வேலை வழங்கும் கடிதங்களை சோதிக்கும்போது, அவை போலியானவை என தெரியவந்தது. இந்தியாவின் மும்பையிலிருக்கும் கப்பல் நிறுவனங்களின் முகவரிகளை மாற்றி, அவை பிரித்தானியாவிலிருப்பதுபோல் மோசடி செய்யப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.
உடனே, கரண்வீர் சிங் (23), குர்வீந்தர் சிங் (36), தர்வேஷ் சிங் (18), விஜய் ஷர்மா (22), குர்ப்ரீத் சிங் (40), மற்றும் தீபக் குமார் (18) என்னும் அந்த ஆறுபேரையும் பொலிசார் கைது செய்தார்கள்.
விசாரணையில், அவர்கள் ஆறு பேரும் வெளிநாட்டில் வேலைக்கு தேர்வு செய்யும் ஏஜன்சிகளுக்கு பெருந்தொகை செலுத்தியிருந்ததும், அவர்களுக்கு வேலை வழங்கும் கடிதம் முதலான போலி ஆவணங்கள் வழங்கப்பட்டதும் தெரியவந்தது. ஆனால், அவர்கள் அனைவருமே முறையான பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்தார்கள்.
ஆகவே, அவர்கள் மோசடி ஏஜண்டுகளால் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
தற்போது, அவர்களுக்கு போலியான ஆவணங்களை வழங்கிய ஏஜண்டுகளை பொலிசார் தேடிவருகிறார்கள்.