இந்தியா-பிரித்தானியா இடையே கூடுதல் விமானச் சேவை அனுமதி! என்று முதல்?
ஆகஸ்ட் 16 முதல் இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே வாரத்துக்கு 60 விமானச் சேவைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகக் கடந்த மார்ச் 23-ஆம் திகதி முதல் வெளிநாட்டினர் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டது. இதில் இந்தியாவும் ஒன்றாகும். அதில் சற்றே தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இந்த தடை மேலும் தீவிரமாக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் பிரித்தானியாவில் கடந்த வாரம் இந்தியர்களுக்குக் கட்டுப்பாடுகளுடன் வர அனுமதி அளிக்கப்பட்டது. முன்பு கொரோனா பரவல் காரணமாக ஓட்டலில் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்னும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்போது அது நீக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது பலரும் பிரித்தானியாவுக்கு செல்வதால் விமானங்களின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானக் கட்டணம் ரூ. 50,000 முதல் ரூ. 70,000 ஆக இருந்தது, ஆகஸ்ட் 8-ஆம் திகதிக்கு பிறகு ரூ. 95,000 முதல் ரூ. 3 லட்சம் வரை உயர்ந்துள்ளது.
தற்போது பல மாணவர்கள் தங்கள் கல்விக்காகப் பயணம் செய்வது, வர்த்தக பயணம், பணிக்கு மீண்டும் திரும்புதல் ஆகியவற்றால் இது அதிகரித்துள்ளது.
தற்போது இந்திய விமான பயண அமைச்சகம் வாரத்துக்கு இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே 30 சிறப்பு விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்க அனுமதி அளித்துள்ளது.
இதில் இரு விமான நிறுவன குழுக்களாக இந்திய நிறுவனங்கள் மற்றும் பிரித்தானிய நிறுவனங்கள் வாரத்துக்குத் தலா 15 விமான சேவைகளை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மத்திய விமானப்பயண அமைச்சகம் இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே வரும் ஆகஸ்ட் 16-ஆம் திகதி முதல் வாரத்துக்கு 60 விமானச் சேவைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதில் 30 விமானச் சேவைகள் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதில் 26 விமானச் சேவைகளை ஏர் இந்தியாவுக்கும் 4 சேவைகள் விஸ்தாரா ஏர்லைன்ஸுக்கும் ஒதுக்கப்பட உள்ளன.