தொடர்ந்து பிரித்தானிய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ள சட்டவிரோத புலம்பெயர்தல்
Seven migrants are found hiding in back of a lorry in England: இங்கிலாந்தில், லொறி ஒன்றின் பின்னால் புலம்பெயர்வோர் ஏழு பேர் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.
படகுகள் மூலம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் நிலையில், அந்த படகுகளை இயக்குவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிதாக சட்டம் கூட இயற்றியாயிற்று.

ஆனாலும், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் பிரித்தானிய அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
பெரும் சவாலாக உள்ள சட்டவிரோத புலம்பெயர்தல்

காரணம் என்னவென்றால், முதலில் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர்.
ஆனால், கெடுபிடிகள் அதிகரிக்கவே, சிறு படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்பத் துவங்கினார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
இப்போது, படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்க பிரான்ஸ், பெல்ஜியம் முதலான நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளது பிரித்தானிய அரசு.
விடயம் என்னவென்றால், படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய கெடுபிடிகள் அதிகரிக்கவே, மீண்டும் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுவருகிறார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர். அவ்வகையில், நேற்று முன்தினம், இங்கிலாந்திலுள்ள Hertfordshireஇலுள்ள சாலை ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றை மடக்கிச் சோதனையிட்டுள்ளனர் பொலிசார்.
அப்போது, அந்த லொறிக்குள் புலம்பெயர்வோர் 7 பேர் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு உதவியாக இருந்ததாக, அந்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.