ஜேர்மன் உணவகத்தில் சாப்பிட்ட ஏழு பேர் உடல் நலம் பாதிப்பு: ஒருவர் பலி
ஜேர்மன் உணவகம் ஒன்றில் உணவருந்திய ஒருவர் பலியானதுடன், ஏழு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று, ஞாயிற்றுக்கிழமை இரவு, பவேரியாவிலுள்ள Weiden நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திய சிலர் பானம் ஒன்றை அருந்தியுள்ளார்கள். ஒரே போத்தலில் இருந்து பானம் அருந்திய அவர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் மயங்கித் தரையில் சரிந்துள்ளார்கள்.
தகவலறிந்து அவசர உதவிக்குழுவினருடன் பொலிசார் அங்கு விரைய, அவர்களில், 33 வயது முதல் 52 வயது உள்ள எட்டு பேர் உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 52 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்று நேற்று இரவே உயிரிழந்துவிட்டார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அருந்திய பானத்தில் நச்சுத் தன்மை இருந்ததாக கூறப்படும் நிலையில், அவர்கள் என்ன பானத்தை அருந்தினார்கள் என்பது குறித்து பொலிசார் தெரிவிக்கவில்லை.
இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.