70 இலட்சம் கனேடியர்கள் பட்டினி : ஆய்வில் தெரியவந்துள்ள உண்மை
கனடாவில் கடந்த ஆண்டு சுமார் 70 இலட்சம் கனேடியர்கள் பட்டினியுடன் போராடியதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிலர் அதிகரித்த பணவீக்கத்தின் மத்தியில் பல நாட்கள் உணவு இல்லாமல் இருந்தார்கள் எனவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளது.
பசியால் போராடும் கனேடியர்கள்
கடந்த ஆண்டில் கனடாவில் 18 வீதமான குடும்பங்கள், உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்துள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு 16 வீதமான கனேடிய குடும்பங்களே உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை என்பது போதுமான தரமான உணவு அல்லது போதுமான அளவு உணவின் பற்றாக்குறை என திணைக்களம் வரையறுத்துள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமான ஒரு பிரச்சினையாக காணப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.
ஏனெனில் இது பல்வேறு நாள்பட்ட நோய் நிலைமைகள், மனநலப் பிரச்சனைகள், ஏனைய நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மையானது, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதுடன், முன்கூட்டிய இறப்பிற்கும் வழி வகுக்கின்றது என கண்டறியப்பட்டுள்ளது எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன் இந்த நிலைமைகள் நாட்டின் சுகாதார பராமரிப்பு கட்டமைப்பு மீதான அழுத்தங்களை அதிகரிக்க செய்கின்றது எனவும் திணைக்களத்தின் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |