பதவி போனாலும் பணம்... இலாபம் பார்த்த 71 பிரித்தானிய அமைச்சர்கள்: எவ்வளவு தெரியுமா?
பிரித்தானிய அமைச்சரவைக் குழப்பங்களால் பதவி போனாலும், அதிலும் அரசியல்வாதிகளுக்கு இலாபம்தான்.
கஷ்டப்படுவது, வழக்கம் போல பொதுமக்கள்தான்.
இந்த ஆண்டு பிரித்தானிய அரசியலில் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளம்.
குற்றச்சாட்டுகளால் பதவி விலகிய பிரதமர் போரிஸ் ஜான்சன், அவருக்கு பதிலாக பொறுப்பேற்று சமாளிக்க முடியாமல் ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸ், இந்த இரு பிரதமர்களும் ராஜினாமா செய்ததால் ராஜினாமா செய்த மற்றும் பதவிநீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் என மொத்தம் 71 பேர் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து தங்கள் பதவியை இழந்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் பதவியை இழந்தது அவர்களுக்கு பண ரீதியாக நஷ்டம் இல்லை, சொல்லப்போனால் இலாபம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வழக்கம்போல நஷ்டம் பொதுமக்கள், அதாவது வரி செலுத்துபவர்களுக்குத்தான்.
ஆம், இந்த ஆண்டின் அரசியல் குழப்பங்கள், 726,000 பவுண்டுகள் அளவுக்கு மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன.
உண்மையில், ஆண்டின் துவக்கத்திலிருந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 79 பேர் தங்கள் பதவியை இழந்திருக்கிறார்கள். அவர்களில் 71 பேருக்கு, பணிநீக்கத் தொகையாக 10,000 பவுண்டுகளுக்கும் அதிகம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, Brandon Lewis என்பவர் லிஸ் ட்ரஸ் அமைச்சரவையின் கீழ் நீதித்துறைச் செயலராக பணியாற்றினார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்கு 34,000 பவுண்டுகள் வழங்கப்பட உள்ளது. நாள் முழுவதும் உழைக்கும் ஒரு செவிலியருக்கே ஆண்டொன்றிற்கு வழங்கப்படும் ஊதியம் 31,676 பவுண்டுகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அடுத்தபடியாக, போரிஸ் ஜான்சனும், லிஸ் ட்ரஸ்ஸும் ஆளுக்கு 18,860 பவுண்டுகள் பெற இருக்கிறார்கள்.
குறுகிய காலமே நிதி அமைச்சராக பணியாற்றி ராஜினாமா செய்த Kwasi Kwartengக்கு சுமார் 17,000 பவுண்டுகள்.
இப்படியே, கொஞ்சம் நாட்களே பதவியிலிருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பெருந்தொகை பார்த்துவிட, மக்கள் ஒரு பக்கம் அரசியல் பேசிக்கொண்டே, மறுபக்கம் விலைவாசி உயர்வை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.