எனக்கும், என்னுடைய காதலிக்கும்... 74 வயது முதியவரின் உருக வைக்கும் வார்த்தைகள்
இந்தியாவின் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் 74 வயதான பட்டாபி ராமன் நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பெங்களூரை சேர்ந்த பெண் நிகிதா ஐயர், ஐடி துறையில் பணியாற்றி வரும் நிகிதா அலுவலகம் செல்வதற்காக சாலை அருகே நின்று கொண்டிருந்தார்.
ஏற்கனவே தாமதமாகிவிட பதற்றத்துடன் நின்றிருந்த நிகிதாவின் அருகில், ஆட்டோ ஒன்று வந்து நின்றுள்ளது.
” வாங்க மேடம், நீங்கள் விருப்பப்பட்ட பணத்தை எனக்கு வழங்கலாம்” என்று ஆங்கிலத்தில் பேசியுள்ளார் ஆட்டோ டிரைவர்.
அவரை பார்த்ததும் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டாராம் நிகிதா, காரணம் அவரின் வயது, 74 வயதான பட்டாபி ராமன் கடந்த 14 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

MA.,MEd படித்துவிட்டு மும்பையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார் பட்டாபி ராமன்.
பேராசியராக பணியாற்றி வந்தாலும் மிக குறைவான ஊதியமே கொடுக்கப்பட்டதாகவும், தனியார் கல்லூரி என்பதால் ஓய்வூதியத் தொகை ஏதுமில்லாமல் இருந்ததால் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் தினமும் ரூ.700- 1500 பணம் கிடைப்பதால், தனக்கும் தன்னுடைய காதலிக்கும் போதுமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காதலியா? என நிகிதா கண்புருவத்தை உயர்த்த, ஆம், என்னுடைய மனைவியை தான் நான் அப்படி கூறினேன் என தெரிவித்துள்ளார் பட்டாபி ராமன்.
மனைவி என்றால் அடிமைத்தனம் வந்துவிடும், காதலி என்றால் நமக்கு இணையானவள் என்ற எண்ணம் வரும், எல்லாருமே சமமானவர்கள், என்னை விட ஒரு சில விடயங்களில் அவள் உயர்வானவள் தான்.
72 வயதான போதும் என்னை வீட்டை கவனித்துக் கொள்கிறாள், என்னுடைய மகன் வீட்டு வாடகையை அளித்து விடுவான்.
மற்ற செலவுகளுக்காக என்னுடைய மகனை சார்ந்திருக்க நான் விரும்பவில்லை, இந்த பணத்தை கொண்டு சந்தோஷமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம், என்னுடைய சாலைக்கு நான் தான் ராஜா என நெகிழ வைக்கிறார் பட்டாபி ராமன்.