9ம் வகுப்பில் 78 வயது முதியவர்! ஆங்கிலம் கற்க 3 கி.மீ நடந்தே செல்லும் தாத்தா
ஆங்கிலம் கற்க 3 கி.மீ நடந்து பள்ளிக்கு செல்லும் 78 வயது முதியவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலம் மீது ஆர்வம்
இந்திய மாநிலம் மிசோரத்தில் இருக்கும் சம்பாய் மாவட்டத்தில் உள்ள ஹ்ருவாய்கான் கிராமத்தை சேர்ந்த முதியவர் லால்ரிங்தாரா (78). இவர் 1945 ஆம் ஆண்டு குவாங்லெங் கிராமத்தில் பிறந்தார்.
பின்பு, தனது தந்தையை இழந்ததால் தனது இளம் வயதிலேயே தாயாருக்கு ஆதரவாகச் சென்றார்.
நிதி நெருக்கடி காரணமாக, லால்ரிங்தாரா 2 ஆம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தி விட்டார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஐந்தாம் வகுப்பில் ஒரு பள்ளியில் சேர்ந்தார். இருப்பினும், லால்ரிங்தாராவின் கல்வியைத் தொடரும் கனவு குறுகிய காலமாக இருந்தது.
ஏனெனில் அவர் நெல் வயல்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது. அப்போது அவர் தூரத்து உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
லால்ரிங்தாராவிற்கு பல இடையூறுகள் இருந்தாலும் அவருக்கு ஆங்கிலம் மீதுள்ள ஆர்வம் குறையவே இல்லை. அவர், ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் ஆர்வமாய் இருந்தார். மிசோ மொழியை கற்று சர்ச் சௌகிதாராக வேலை செய்து வந்தார்.
பள்ளிக்கு சென்ற 78 வயது முதியவர்
இந்நிலையில், எட்டாம் வகுப்பை முடித்த பிறகு, லால்ரிங்தாரா இந்த ஆண்டு ஹ்ருஐகாவ்னினில் உள்ள ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கை பெற்று ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தார்.
அவருக்கு பள்ளி நிர்வாகம் புத்தகம் மற்றும் சீருடைகளை வழங்கியது . பின்னர் அவர், மற்ற மாணவர்களை போல பள்ளி சீருடை அணிந்து, புத்தகங்களை பையில் சுமந்து, 3 கிலோமீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று கல்வி கற்கிறார்.
மேலும் அவர், ஆங்கிலத்தில் எழுதவும், ஆங்கில செய்தி அறிக்கையை புரிந்து கொள்வதையே நோக்கமாக கொண்டிருந்தார். இதனிடையே, பள்ளி பொறுப்பாளர் கூறும் போது,"லால்ரிங்தாரா பிற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதாரணமாக இருக்கிறார் " என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |