RAF ஃபேர்போர்ட் குண்டு வைப்பு சதி: 7வது நபரை கைது செய்த பொலிஸார்
RAF ஃபேர்போர்ட் இராணுவ தளத்திற்கு அருகே நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடர்பாக 7 வது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
7வது சந்தேக நபர் கைது
பிரித்தானியாவில் உள்ள RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்திற்கு அருகே செப்டம்பர் 27ம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு பிறகு சந்தேகத்திற்குரிய 5 ஆண்கள் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.
மேலும் அக்டோபர் 1ம் திகதி மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய 7 வது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த 22 வயது இளைஞரான அவர், வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 2006ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி இருந்த நிலையில், RAF ஃபேர்போர்ட் விமான தளத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவு மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் விக்கி ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தின் சிக்கலான தன்மையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இதன் புலனாய்வு பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.