8 சதவிகித வீடுகள் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு... சுவிஸ் ஆய்வு முடிவுகள்
சுவிஸ் மாகாணமொன்றில், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 8 சதவிகிதம் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 92 சதவிகிதமும் உள்ளூர் மக்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
வெளிநாட்டவர்களுக்கு 8 சதவிகித வீடுகள் மட்டுமே
கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வீடுகள் தட்டுப்பாடு நிலவுவது குறித்த செய்திகள் வெளியாகிவரும் நிலையில், வீடுகள் தட்டுப்பாட்டுக்கு வெளிநாட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் நிலையும் காணப்படுகிறது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில், வீடுகள் தட்டுப்பாடு குறித்த ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில், சூரிக் மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 8 சதவிகிதம் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதும், மீதமுள்ள 92 சதவிகிதமும் உள்ளூர் மக்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இன்னொரு விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்துக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு உள்ளூர் குறித்த விவரங்கள் தெரியாததாலும், அவர்கள் சீக்கிரமாக வீடொன்றில் குடியமர விரும்புவதாலும், அதிக வாடகையில் வீடு பிடிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும், வீட்டு உரிமையாளர்கள் பழைய வீடுகளை புதுப்பித்து புதிய வீடுகள் போல காட்டி அவர்களை ஏமாற்றுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சூரிக் மாகாணத்தைப் பொருத்தவரை, புதிய வீடுகளைவிட இந்த புதுப்பிக்கப்பட்ட வீடுகளுக்கு 25 சதவிகித அதிக வாடகை பெறப்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இப்படி ஏமாற்றப்படுவது பணக்கார நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல, ஏழை நாடுகளிலிருந்து வரும் புதியவர்களும்கூட, புதுப்பிக்கப்பட்ட வீடுகளை அதிக வாடகைக்கு எடுத்து தங்கும் நிலை காணப்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஏழைகளானாலும் சரி, பணக்காரர்களானாலும் சரி, சுவிஸ் மக்களைவிட சுவிஸ் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்கள் வீடுகளுக்கு அதிக வாடகை கொடுப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |