8 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் மாயம்: மர்ம நபர்களை தேடும் பொலிசார்
Massive gold heist at Vadodara showroom before inauguration: குஜராத்தில் நகை கடை ஒன்று திறப்பதற்காக கொண்டு வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மாயமாகியுள்ளது.
மும்பையிலுள்ள தங்கம் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றின் மேலாளர் ஹிமான்ஷு ஜெயின்.
தன்னிடமிருந்து சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி செய்யப்பட்டதாக புகாரளித்துள்ளார் அவர்.
8 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் மாயம்
ஜெயினிடம், குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த நகை வியாபாரியான பவிகுமார் சோனி என்பவர், தான் புதிதாக கடை ஒன்று திறக்கப்போவதாகவும், தனக்கு நகைகள் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, சுமார் 5.5 கிலோ எடையுள்ள தங்க நகைகளுடன் தன் சகோதரரான நீல் என்பவரையும் அழைத்துக்கொண்டு வதோதரா வந்துள்ளார் ஜெயின்.
கடையில் ஜெயினும் அவரது சகோதரரும் சோனியும் நகைகளை கண்ணாடிப் பெட்டிகளில் அடுக்கிவைக்கத் துவங்கியுள்ளார்கள்.
மதியம் சாப்பிடச் செல்லலாம் என சோனி புறப்பட, கடையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு சோனியுடன் நீலும் சென்றுள்ளார் ஜெயின் இன்னொரு பக்கம் கழிவறைக்குச் சென்றுள்ளார்.

இதற்கிடையில், நீலுடன் சென்ற சோனி, தனக்கு தலை சுற்றுவதாகவும், இப்போது வந்துவிடுகிறேன் என்றும் கூறிவிட்டு எங்கோ சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்தப்பக்கம், கழிவறைக்குச் சென்றுவிட்டு கடைக்குத் திரும்பிய ஜெயின், கடை திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
கடைக்குள் சென்று பார்க்கும்போது, அவர் கொண்டு வந்த 5.5 கிலோ தங்க நகைகளும் மாயமாகியுள்ளதைக் கண்ட அவர் உடனடியாக பொலிசாரை அழைத்துள்ளார்.
பொலிசார் வந்து சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்யும்போது, மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வருவதும், தங்க நகைகள் அடங்கிய பைகளுடன் அவர்கள் புறப்பட்டுச் செல்வதும் தெரியவந்துள்ளது. சோனியை அழைக்க முயன்றால், அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
ஆக, ஏற்கனவே நன்கு திட்டமிட்டு சோனியும் அவரது கூட்டாளிகளும் இந்த திருட்டை அரங்கேற்றியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், திருடர்களை பொலிசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.
ஜெயின் கழிவறைக்குச் சென்று திரும்பிய 12 நிமிடங்களுக்குள் இந்த திருட்டு நடந்துள்ளது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 8.28 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.