தமிழ்நாட்டில் கிடைத்த தங்க புதையல் - விவசாய நிலத்தில் இருந்த தங்க நாணயங்கள்
தமிழ்நாட்டில், விவசாய நிலத்தில் ஏராளமான தங்க நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தங்க புதையல்
தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஆதவன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி, தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் உள்ள கற்களை பொக்லைன் உதவியுடன் அகற்றி, நிலத்தை சமப்படுத்தியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக, நிலத்தில் பழங்கால குடுவை ஒன்றை கண்டறிந்துள்ளார். அதில் ஏராளமான தங்க நாணயங்கள் இருந்துள்ளன.
இது குறித்து ஆதவன் அரசுக்கு தகவல் அளிக்கவில்லை. ஆனால், இந்த தகவல் ஊர் முழுக்க பரவவே, தகவலறிந்து திருப்பத்தூா் வட்டாட்சியர் நவநீதம் மற்றும் வருவாய்த் துறையினர் ஆதவன் வீட்டிற்கு வந்து பழங்கால குடுவையை கைப்பற்றியுள்ளனர்.

குடுவையில் உள்ள நாணயங்களை வருவாய் துறையினர் எண்ணிப்பார்த்ததில், 86 தங்க நாணயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த நாணயங்கள் எந்த காலத்தை சேர்ந்தவை என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
புதையல் யாருக்கு சொந்தம்?
1878 ஆம் ஆண்டு இந்திய புதையல் சட்டப்படி, ஒருவ ருக்கு புதையல் கிடைத்தால் அதனை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்தலோ, அல்லது விற்பனை செய்தாலோ அது சட்டப்படி குற்றமாகும்.

ஒருவர் தன்னுடைய சொந்த நிலத்தில் புதையலை கண்டறிந்தால், புதையலுக்கான உண்மையான வாரிசுகள் உரிமை கோர வராத பட்சத்தில், அது நில உரிமையாளருக்கே சொந்தமாகும்.
உங்கள் நிலத்தில், வேறொருவர் புதையலை கண்டறிந்தால் அது 50% புதையலை கண்டறிந்தவர் மற்றும் நில உரிமையாளருக்கு சமமாக பிரித்து வழங்கப்படும்.
அதேவேளையில், காடு, மலை உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் புதையல் கண்டறியப்பட்டால் அது முழுக்க முழுக்க அரசுக்கே சொந்தமாகும். அரசு விரும்பினால் சன்மானம் அளிக்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |