லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டம்! அதிரடியாக கைது செய்த பொலிசார்: ஏன் தெரியுமா?
லண்டனில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள், காரணமாக சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரித்தானியாவில் கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தடுப்பூசி போடப்பட்டு வருவதன் மூலம், இங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது.
இதனால், ஜுன் மாத கடைசியில் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கும் திட்டத்தை அரசு வைத்திருந்தது. ஆனால், தற்போது பிரித்தானியாவில் உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், கட்டுப்பாடுகள், அடுத்த நான்கு வாரத்திற்கு நீட்டியுள்ளது. ஆனால், சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது,
இருப்பினும் இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் தளர்த்தும் படி மத்திய லண்டனில் சுமார் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் இசைத்துறையை ஆதரிப்பவர்கள், இன்னும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இசைத்துறைக்கு அனுமதி தரப்படாத காரணத்தினால், அனுமதி வழங்க கோரி, தளர்த்தப்பட்ட பல கட்டுப்பாடுகளை சுட்டிக் காட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அங்கிருக்கும் பிரபல ஊடகங்களுக்கு வெளியே இவர்கள் கூடினர். அதாவது பாராளுமன்றத்தை நோக்கி சென்ற இவர்கள், அதற்கு முன் ரீஜண்ட் தெருவில் இருக்கும் பிரபல ஊடகமான பிபிசிக்கு முன் கூடினர்.
அப்போது அவர்கள் ஆரம்ப கட்ட ஊரடங்கில் இருந்தே, நேரடி நிகழ்ச்சிகள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், திருவிழாக்கள் மற்றும் பெரிய கூட்டங்கள் மீண்டும் தொடங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கும் படி அவர்கள் வலியுறுத்தினர்.
அது தொடர்பான பேனர்களை கையில் வைத்திருந்தனர். இசை ஆர்வலர்களே இசையை காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டனர். அதிகாலை 6.40 மணிக்கு மேல், லண்டனின் பலவேறு பகுதிகளில் துவங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில், பல தேசிய ஊடகங்கள் இருக்கும் பகுதிக்கு சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் இது பரபரப்பு செய்தியாக மாறியது. இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் நெடுஞ்சாலைச் சட்டத்தின் பிரிவு 148-ன் கீழ் ஒரு குற்றத்திற்காக ஐந்து பேரை கைது செய்துள்ளோம்.
ஐந்து பேரில் நான்கு பேரும் கிரிமினல் சேதத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். காலை 8 மணியளவில், விக்டோரியாவின் பக்கிங்ஹாம் அரண்மனை சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே 54 வயது நபர் போராட்டம் என்ற பெயரில் சேதம் விளைவிக்கும் வகையில் நடந்த கொள்ள முயன்றார்.
ஆனால், அவரை தடுத்துவிட்டோம். இருப்பினும், நெடுஞ்சாலைச் சட்டத்தின் பிரிவு 148-ன் கீழ் மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 6 பேரும் பொலிஸ் காவலில் உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மேலும் பலர் இரவு விடுதிகளை திறக்க கோரியும், ஒரு இளைஞர்களின் குழு அணி வகுத்து சென்றதையும், மற்றொரு சிலர் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் நீக்கும் படி வலியுறித்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது.