பல கோடி சொத்துக்களை வேண்டாம் எனக்கூறி துறவியான 9 வயது சிறுமி!
இந்திய மாநிலம் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 9 வயது மகள் தீட்சை பெற்று துறவியான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைர வியாபாரியின் மகள்
உலகின் பழமையான வைர நிறுவனங்களில் ஒன்றான சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் தனேஷ் சங்வி.
இவருக்கு 9 வயதில் தேவன்ஷி சங்வி என்ற மகளும், 4 வயதில் இன்னொரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகளான தேவன்ஷி குறைந்த வயதிலேயே துறவறத்தில் ஈடுபாடு கொண்டதால், அவரது பெற்றோர் துறவியாக சம்மதம் தெரிவித்தனர்.
9 வயதில் தீட்சை
அதனைத் தொடர்ந்து அவர் சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல நூறு பேர் முன்னிலையில் தீட்சை எடுத்துக் கொண்டார். தேவன்ஷி தீட்சை எடுப்பதற்கு ஒருநாள் முன்பு நகரத்தில் ஒட்டகங்கள், யானைகள், குதிரைகள் மற்றும் பெரும் ஆரவாரத்துடன் ஒரு பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த சிறுமி தீட்சைக்கு முன்பாக துறவிகளுடன் 600 கிலோ மீற்றர்கள் நடந்து சென்று கடினமான துறவியின் வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
எளிமையான வாழ்க்கை
அதே போல் தேவன்ஷி சிறுவயது முதலே ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பிரார்த்தனை செய்து எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் தொலைக்காட்சி, திரைப்படம் பார்த்ததில்லை என்றும், திருமணங்களில் கூட கலந்துகொள்ளாத நிலையில், 367 தீட்சை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதாக சங்விசின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.