98 மில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப் பெரிய உயிரினம் கண்டுபிடிப்பு!
அர்ஜென்டினாவில் 98 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய டைனோசர் புதைபடிவங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தென்மேற்கு அர்ஜென்டினாவில், மனித அளவிலான எலும்புகளுடன் சவுரோபாட் (Sauropods) எனும் டைனோசர் இனத்துக்கு சொந்தமான ஒரு மிகப்பெரிய புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இதுவரை அடையாளம் காணப்பட்ட Patagotitan mayorum எனும் மிகப்பெரிய சவுரோபாட் டைனோசரை விட 10-20 சதவிகிதம் பெரியது எனக் கூறப்படுகிறது.
Sauropods இனம் மிகப்பெரிய நீண்ட கழுத்து, நீண்ட வால், தாவர உண்ணும் டைனோசர்கள் வகையாகும். அதில், Patagotitan mayorum சுமார் 70 டன் எடை மற்றும் 40 மீட்டர் (131 அடி) நீளம் கொண்டது.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய Sauropod டைனோசரின் அளவை பார்க்கும்போது, இதுவே உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய நிலப்பரப்பு உயிரினமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த மிகப்பெரிய Sauropod டைனோசரின் புதைபடிவங்கள் முதன்முதலில் நியூகென் நதி பள்ளத்தாக்கில் 2012-ஆம் ஆண்டில்கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் அகழ்வாராய்ச்சி பணிகள் 2015-ல் மட்டுமே தொடங்கப்பட்டன.
அதன் தோண்டல் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், மொத்த படிமங்களையும் முழுவதுமாக தோண்டி வெளியில் எடுக்க இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.