பணி நேரம் முடிந்தபின் ஊழியர்களை தொந்தரவு செய்யக்கூடாது: சுவிஸ் அரசியல்வாதி ஒருவர் முன்வைத்துள்ள மசோதா
சுவிஸ் அரசியல்வாதி ஒருவர், பணி நேரம் முடிந்தபின் வீட்டிலோ வெளியிலோ இருக்கும் ஊழியர்களை அலுவலகங்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி மசோதா ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஊழியர்கள் மன அழுத்தத்துக்கும் நோய்க்கும் ஆளாவதாக குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்தில் கிரீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Greta Gysin என்பவர், ஊழியர்கள் பணி நேரம் முடிந்து தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்திலும் அலுவலகத்திலிருந்து வரும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளால் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும், நோய்வாய்ப்படுவதாகவும் தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
ஆகவே, பணி நேரம் முடிந்தபின் ஊழியர்களை அலுவலகங்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி அவர் மசோதா ஒன்றை முன்வைத்துள்ளார்.
தற்போதைய சூழலில் பலர் வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்யும் நிலையில், பணிநேரத்துக்கும் தங்கள் சொந்த நேரத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி பெரிதும் பாதிக்கப்படுவதாக இந்த மசோதாவை ஆதரிப்பவர்களும் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அரசோ, இப்படி ஒரு மசோதா தேவையில்லை, ஏனென்றால், ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றின்படி, வேலை நேரம் இல்லாதபோது பணி வழங்குவோர் அழைத்தால், ஊழியர்கள் உடனடியாக பதிலளிக்கவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கக்கூடாது என விதி உள்ளது என்கிறது.
இந்த மசோதா அடுத்த வாரம் சுவிஸ் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.