லண்டன் விமானத்தில் வெடிகுண்டு? பயணிகளுக்கு உயிர் பயத்தைக் காட்டிய ஒரு சம்பவம்
லண்டன் விமான நிலையம் ஒன்றில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலால் மக்கள் திகிலடைந்தார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனிலிருந்து ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஆப்பிள் நிறுவன மொபைல் வைத்திருப்பவர்களுக்கு குறுஞ்செய்திகள் வந்ததால் விமானத்திலிருந்த பயணிகள் பீதியடைந்தனர்.
புதன்கிழமை இரவு 7.40 மணிக்கு, லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திலிருந்து ஏர்பஸ் விமானம் ஒன்று ஆஸ்டர்டாம் செல்லத் தயாராக நின்றது.
அப்போது, ’என்னிடம் வெடிகுண்டு உள்ளது’ என அதே விமானத்திலிருக்கும் பயணி ஒருவர் அனுப்பிய செய்தி, ஆப்பிள் நிறுவன மொபைல் வைத்திருப்பவர்களை வந்தடைந்துள்ளது.
பயணிகள் திகிலடைய, உடனடியாக எசெக்ஸ் பொலிசாரும்,வெடிகுண்டு நிபுணர்களும் விமானத்துக்கு விரைய, விமானம் பாதுகாப்பான ஒரு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட, விமான ஓடுபாதை மூடப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்களும் பொலிசாரும் விமானத்தை சோதனையிட, வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தி புரளி என்பது தெரியவந்தது. குறுஞ்செய்தி அனுப்பிய நபரை கைவிலங்கிட்ட பொலிசார் அவருடன் பயணித்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆணையும் விமானத்திலிருந்து வெளியேற்றி காவலில் அடைத்துள்ளனர்.
18 மற்றும் 22 வயதுடைய ஆண்கள் இருவரும் 18 வயதுள்ள பெண் ஒருவரும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அச்சத்தில் உறைந்திருந்த விமானப் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு ஹொட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டு மறு நாள்தான் புறப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொறுமை காத்த பயணிகளுக்கு பொலிசார் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.