கண் பார்வையற்றவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைய இருக்கும் Phoenix 99
சில வகை பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் மீண்டும் பார்க்க உதவும் வகையிலான கருவி ஒன்றை அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளார்கள்.
Phoenix 99 என்று அழைக்கப்படும் அந்த கருவி, அறுவை சிகிச்சை மூலம் கண்களிலுள்ள விழித்திரையின் (retina)பின்பக்கத்தில் பொருத்தப்படுகிறது.
இந்த ஆய்வை சிட்னி பல்கலை மற்றும் நியூ சவுத்வேல்ஸ் பல்கலை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த Phoenix 99 என்னும் செயற்கைக் கண்கள், சோதனை முயற்சியாக சில ஆடுகளின் கண்களில் பொருத்தப்பட்டன.
அந்தக் கருவியை கண்களுக்குள் பொருத்துவதால் பாதகமான விளைவுகள் ஏதாவது ஏற்படுகின்றனவா என்பதை அறிவதற்காக அது ஆடுகளின் கண்களில் பொருத்தப்பட்டது.
கண்ணின் பின் பகுதியில் உள்ள விழித்திரையில் அறுவை சிகிச்சை முறையில் பொருத்தப்படும் இந்த Phoenix 99 என்னும் கருவி, வயர்லெஸ் முறையில் ஒரு சிறு கமெராவுடன் இணைக்கப்பட்டு, அந்த கமெரா கண் கண்ணாடி ஒன்றில் பொருத்தப்படுகிறது.
Phoenix 99 விழித்திரையைத் தூண்ட, பொருட்களின் மீது பட்டு எதிரொளிக்கும் ஒளியை விழித்திரையிலுள்ள செல்கள் மின் செய்திகளாக மாற்றி மூளைக்கு அனுப்ப, அந்தப் பொருளை பார்க்கமுடிகிறது என்பதுதான் இந்த கருவி செயல்படும் தத்துவமாகும் .
மூன்று மாதங்கள் அந்தக் கருவி ஆடுகளின் கண்களில் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்ட நிலையில், அவற்றால் ஆடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளதையடுத்து, அதை மனிதர்களுக்கு பொருத்திப் பார்க்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக அனுமதி கோரியுள்ளார்கள் அந்த ஆய்வாளர்கள்.