அபூர்வ பிரச்சினை ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய நகரம்: மண்டையை வெடிக்க வைக்கும் மர்மச் சத்தம்...
பிரித்தானிய நகரம் ஒன்று மர்மச் சத்தம் ஒன்றால் எதிர்பாராத பிரச்சினைக்குள்ளாகியுள்ளது.
இங்கிலாந்திலுள்ள Holmfield என்ற நகரில் வாழ்பவர்கள், மண்டையை வெடிக்கச் செய்வது போல் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தச் சத்தத்தால் தங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடுவது போல உணர்வதாக தெரிவிக்கிறார்கள்.
குறைந்த அதிர்வலைகள் கொண்ட அந்த சத்தம் தன் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டதாக தெரிவிக்கிறார் Yvonne Conner என்ற பெண்.
மக்கள் அந்த மர்மச் சத்தத்திற்கு Holmfield Hum என்று பெயரிட்டுள்ளார்கள். இரண்டு ஆண்டுகளாக அந்த பிரச்சினைக்குத் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறும் Yvonne, தன் தலை வெடிக்கப்போவது போல உணர்வதாக தெரிவிக்கிறார்.
அந்த மர்மச் சத்தம் குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் அந்தச் சத்தம் தொழிற்சாலைகளில் இயங்கும் பெரிய காற்றாடிகளால் உருவாகலாம் என்றும், சிலர் அது அமெரிக்க இராணுவ செயல்பாடு ஒன்றாக இருக்கலாம் என்றும், சிலரோ, ஏலியன்கள் பூமிக்கு அனுப்பும் சிக்னலாக இருக்கலாம் என்று கூட கருதுகிறார்கள்.
தான் பல ஆண்டுகளாக Holmfieldஇல் வாழ்ந்து வந்தாலும், தற்போது இந்த சத்தம் உருவாக்கியுள்ள தொல்லையால், வேறு எங்காவது குடிபெயர்ந்துவிடலாமா என்று கூட யோசித்துக்கொண்டிருக்கிறாராம் Yvonne.
அவரைப் போலவே, செவிலியர் பயிற்சி பெற்று வரும் Chloe Robinson என்ற இளம்பெண்ணும், கடந்த ஆறு மாதங்களாக அந்த சத்தம் தன் காதுகளில் ஒலித்து வருவதாகவும், அது தங்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
மதுபான விடுதி ஒன்றும், திருமண மண்டபம் ஒன்றும் நடத்தி வரும் Simon Speechley, தாங்கள் இது தொடர்பாக நகர கவுன்சிலுக்கு புகாரளித்தும் அவர்கள் இந்த பிரச்சினையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்.
ஆகவே, 100,000 பவுண்டுகள் செலவில் ஸ்பீக்கர் சிஸ்டம் ஒன்றை அமைத்து அந்த மர்மச் சத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளாராம்.
விடயம் என்னவென்றால், அந்தச் சத்தம் எல்லோர் காதுகளிலும் ஒலிக்கவில்லை என்பதுதான்.
கடை ஒன்றை நடத்தி வரும் Sam West என்பவர், தனக்கு அப்படி ஒரு சத்தம் கேட்கவேயில்லை என்றும், ஆனால், மற்றவர்கள் தங்கள் காதுகளில் அப்படி ஒரு சத்தம் கேட்பதாகக் கூறுவதை தான் அறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த மர்மச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.