நீங்களும் முதலாளி ஆகலாம்.. பில்டர் காபி கடை தொடங்க அரசு கொடுக்கும் அரிய வாய்ப்பு
ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய தொழில் தொடங்க வசதியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைக்க, மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவது தொடர்பான தகவலை பற்றி இங்கு பார்க்கலாம்.
என்னென்ன வழங்கப்படும்?
இந்த சொந்த தொழில் தொடங்குவதற்கு காலி இடம் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைப்பதற்கும், தொழில் முனைவோர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிக்கும் விலக்கு அளிக்கப்படும்.
மேலும், உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சமும், மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணமும் விலக்கு அளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், தேவையான பொருள்கள் வாங்குவதற்கு பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் 5% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த தொழிலை தொடங்குவதற்கான செயல் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
இந்த தொழில் தொடங்குவதற்கு, 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற www.tahdco.com என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். புகைப்படம் மற்றும் சான்றிதழ்கள் தேவைப்படும்.
மேலும், இந்த தொழிலுக்கு 6.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை திட்டத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான மானியம் ஆதிதிராவிடர்களுக்கு 30% அல்லது அதிகபட்சமாக 2.25 லட்சம் எனவும், பழங்குடியினருக்கு மானியமாக 50% அல்லது அதிகபட்சமாக 3.75 லட்சம் எனவும் வழங்கப்படும்.
குறிப்பாக, இதில் பயன் பெறுபவர்கள் 5 முதல் 10% சொந்தமாக வங்கியில் முதலீடு செய்து மீதமுள்ள தொகையை வங்கி கடனுதவி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |