குழந்தையின் அருகே பாய்ந்த துப்பாக்கிக் குண்டு: பிரான்சில் திகிலை ஏற்படுத்திய ஒரு சம்பவம்...
பிரான்சில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் அருகே துப்பாக்கிக் குண்டு ஒன்று பாய்ந்த விடயம் அந்தக் குழந்தையின் பெற்றோரை திகிலடையவைத்தது.
அந்த குண்டு தவறுதலாக பாய்ந்ததா, அல்லது வேண்டுமென்றே பிரயோகிக்கப்பட்டதா என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரான்சிலுள்ள Monnetier-Mornex என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தன் பெற்றோர்கள் அருகிலிருக்க, மூன்று வயது குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டிருந்திருக்கிறது.
அப்போது, திடீரென குழந்தையின் அருகில் துப்பாக்கிக் குண்டு ஒன்று பாய, குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
அந்த குண்டு, வேட்டைக்காரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்துள்ளது. உடனடியாக அந்த பகுதியில் வேட்டையாட அதிகாரிகள் தடை விதித்துள்ளார்கள்.
இதற்கிடையில், அந்த குண்டு தவறுதலாக குழந்தையின் அருகே பாய்ந்ததா, அல்லது துப்பாக்கியால் சுட்ட நபர் வேண்டுமென்றே அந்த வீட்டைக் குறிவைத்து சுட்டாரா என்பது குறித்து பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
துப்பாக்கியால் சுட்ட வேட்டைக்காரரின் துப்பாக்கி உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீது தவறு என தெரியவரும் பட்சத்தில், வேட்டையாட அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.