ஹரி மேகன் பேட்டியில் சொல்லப்பட்ட பல தகவல்களில் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டநிலையில் ஓபரா வின்ஃப்ரேக்கு ஒரு சவால்!
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ராஜ குடும்பத்தை கிழித்து தொங்கவிட்டுவிட்டார்கள்.
ஆனால், அவர்கள் கூறியதில் பல விடயங்கள் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், உண்மை என்ன என்பது குறித்து வின்ஃப்ரேயும், CBS தொலைக்காட்சி நிறுவனமும் விசாரணை மேற்கொள்வார்களா என சவால் விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் உணர்ச்சி மயமாக பேட்டி கொடுத்து ஒரு வாரம் ஆகப்போகிறது.
இனவெறி, பாலின பாகுபாடு என அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளால், பல குடும்பங்களுக்குள்ளும், சமுதாயங்களுக்குள்ளும் ஏன் நாடுகளுக்குள்ளும் கூட பிளவுகள் உருவாகிவிட்டன.
குறிப்பாக ராஜ குடும்பத்தினர் இன வெறியர்களா என மக்கள் மனதில் எழுந்த கேள்வி, நேரடியாகவே இளவரசர் வில்லியமிடம் கேட்கப்படும் அளவுக்கு மக்கள் மனதில் குடைச்சலை ஏற்படுத்திவிட்டது.
50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்ட, பார்வையிட்டு வரும் அந்த பேட்டியின் மையத்தில் இருப்பவர்... ஓபரா வின்ஃப்ரே என்ற தொலைக்காட்சி பிரபலம்! கருப்பினப்பெண்ணான ஓபராவின் உண்மையான பெயர் ஓர்பா கெயில் வின்ஃப்ரே. மக்கள் தவறாக அவரை ஓபரா என்றே அழைக்க, அந்த பெயரிலேயே பிரபலமாகிவிட்டார் அவர்.
ஆனால், பிரபலமாவதற்கு முந்தைய அவரது கதை அவ்வளவு இனிமையானதல்ல... திருமணமாகாத பதின்ம வயது பெண்ணான Vernita Lee என்ற பெண்ணுக்கு பிறந்தவர் ஓபரா. ஒரு வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்தவர் அவரது தாய். இன்று வரையில் அவரது தந்தை என இருவரது பெயர்கள் கூறப்படுவதுண்டு.
தன் பாட்டி வீட்டில் வறுமையில் வாழ்ந்த ஓபரா, ஒன்பது வயதாக இருக்கும்போதே அவரது உறவினர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர். இந்த விடயங்களை அவரே 1986ஆம் ஆண்டு தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இப்படி சிறுவயதில் பல கஷ்டங்களை அனுபவித்து, பின்புதான் அவர் ஒரு தொலைக்காட்சி பிரபலமானார்.
ஆகவே, ஒரு கலப்பினப்பெண்ணான மேகன் ராஜ குடும்பத்தின்போது குற்றம் சாட்டும்போது, ஓபரா அவரது இடத்தில் தன்னை வைத்துப் பார்த்திருக்கலாம்! ஆனால், உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கூறப்படும் விடயங்கள் உண்மையா என அவர் ஆராய்ந்திருக்கவேண்டாமா?.
ஆனால், அது நடக்கவில்லை, எந்த விடயமும் உண்மையா என உறுதி செய்யப்படாமலே ஒளிபரப்பப்பட்டுவிட்டது.
மொத்த ராஜ குடும்பத்தின் கௌரவத்தையும், உலகம் பார்க்க கூறுபோட்டுவிட்டது அந்த பேட்டி.
ஒரு சின்ன விடயம்... தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கப்பட்டுவிட்டதாக ஹரி கூறியபோது, ராஜ குடும்ப மூத்த உறுப்பினர் அல்லாதவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாது என்ற உண்மையை உலகமறிந்த நிலையில், அது கூட ஓபராவுக்கு தெரியாதா? ஏன் அவர் ஹரியை மறுத்துப் பேசவில்லை? சரி, விடயத்துக்கு வருவோம், பேட்டியில் மேகன் கூறிய 13 விடயங்கள் பொய் என பிரித்தானிய பத்திரிகைகள் ஆதாரத்துடன் நிரூபித்தாயிற்று.
இந்நிலையில், அதாவது பொய்கள் பலவற்றை ஒளிபரப்பி ராஜ குடும்பத்துக்கு அவமதிப்பைக் கொண்டுவந்த நிலையில், அவைகள் பொய்கள் என தெரியவந்த பிறகாவது, ஓபராவும், அவர் சார்ந்த தொலைக்காட்சியும், உண்மைகளை விசாரிப்பார்களா என ஒரு சவால் அவர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஓபராவிடமிருந்தும் CBS தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்தும் என்ன பதில் வரும், பதில் வருமா? பார்ப்போம்!



