உள்நாட்டு யுத்தம் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது: பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கை கடிதம்
இஸ்லாமியவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஆட்சியைக் கைப்பற்றுவோம் என பிரான்ஸ் ஓய்வு பெற்ற ஜெனரல்கள் உட்பட இராணுவ வீரர்கள் பலர் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த விடயம் ஆட்சியாளர்களை கொந்தளிக்கச் செய்தது.
அந்த கடிதத்தில் உள் நாட்டு யுத்தம் ஒன்று வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது, ஆகவே, அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த ஜெனரல்கள் உட்பட, ஓய்வு பெற்ற இராணுவத்தினரின் பதவி பறிப்பு, ஓய்வூதியம் நிறுத்தம் என பல நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக மூத்த இராணுவ அதிகாரிகள் மிரட்டல் விடுத்தார்கள்.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. முந்தைய கடிதத்தில் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் கையெழுத்திட்ட நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் இராணுவத்தில் தற்போது பணியிலிருக்கும் வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நாங்கள் பக்கத்து நாட்டின்மீது போரிட்டு அதைக் கைப்பற்றச் சொல்லவில்லை, நாங்கள் நமது நாட்டைக் காப்பாற்றுவதைக் குறித்து பேசிக்கொண்டிருகிக்றோம், உங்கள் நாட்டைக் காப்பாற்றுவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்ற முறை கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் மிரட்டப்பட்டதால், இம்முறை யார் யார் கடிதத்தில் கையெழுத்திட்டது என்பது குறிப்பிடப்படவில்லை.
அத்துடன், சுமார் 93,000 பொதுமக்களும் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மீண்டும், இராணுவ தலைமைக்கும், ஆட்சியாளர்களுக்கும் இந்த கடிதம் தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு நெருக்கமானவரும், உள்துறை அமைச்சருமான Gerald Darmanin, இது ஒரு அரை வேக்காட்டுத் திட்டம் என்றும், கையெழுத்திட்டுள்ளவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாததால், அவர்களை கோழைகள் என்றும் விமர்சித்துள்ளார்.