பிரித்தானிய கடற்கரையில் வித்தியாசமான ஒரு காட்சி: தமிழ் சினிமா பாணியில் போதைப்பொருள் கடத்தலா?
வேல்ஸ் கடற்கரை ஒன்றில் பிளாஸ்டிக் கேன்களுடன் இணைக்கப்பட்ட கருப்பு நிற பைகளில் ஒரு பவுடர் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது கொக்கைன் என்னும் போதைப்பொருள் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ் சினிமா ஒன்றில், கடற்படை அதிகாரிகளிடம் சிக்காமல் போதைப்பொருள் கடத்துவதற்காக, ரப்பர் டியூபில் போதைப்பொருட்களை அடைத்து, அத்துடன் உப்பு மூட்டைகளைக் கட்டி கடலில் வீசிவிடுவார் நாயகன்.
அதேபோன்றதொரு விடயம் பிரித்தானியாவில் நடந்திருக்கலாமோ என சந்தேகிக்கும் வகையிலான ஒரு காட்சி சமீபத்தில் வெளியாகியுள்ளது.
கருப்பு நிற பைகளில் ஒரு பவுடரை அடைத்து பார்சல் செய்யப்பட்டு, அந்த பைகள் பிளாஸ்டிக் கேன்களுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவை கரையொதுங்கியுள்ளன.
அந்த பவுடரை அதிகாரிகள் பரிசோதித்ததில், அது கொக்கைன் என்னும் போதைப்பொருள் என தெரியவந்துள்ளது.
வேல்ஸிலுள்ள Aberystwyth என்ற இடத்துக்கு அருகிலுள்ள கடற்கரையில் இந்த பொருட்கள் கரையொதுங்கியுள்ளன. ஆக, யாரோ இந்த போதைப்பொருளை வித்தியாசமாக கடத்த முற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேபோல பல இடங்களில் பல பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், பொதுமக்கள் அவற்றைக் கண்டால் தொடவேண்டாம் என்றும், அவற்றைக் கண்டால் உடனடியாக பொலிசாரை அழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.