பிரான்ஸ் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் பரவும் குழந்தைகளை பாதிக்கும் ஒரு நோய்: தொற்று பயங்கரமாக இருக்கும் என அச்சம்
குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு நோய் பிரான்ஸ் முழுவதும் பரவி வருகிறது.
ஐரோப்பாவுக்குள் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தாக்கக்கூடிய, Bronchiolitis என்னும் நோய் பரவிவருகிறது.
Bronchiolitis என்பது, சுவாசப்பாதையை தாக்கும் ஒரு நோயாகும்.
கடந்த ஆண்டில் மிகக் குறைந்த அளவிலேயே இந்த நோய் பரவிய நிலையில், இந்த ஆண்டு அந்நோய் பயங்கரமாக பரவும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டில் குறைந்த அளவிலான குழந்தைகளே இந்த நோயால் பாதிக்கப்பட்டார்கள். அதாவது, அப்படி பாதிக்கப்பட்ட கொஞ்சம் குழந்தைகளுக்கு மட்டுமே தற்போது Bronchiolitisக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். ஆகவே, மற்ற குழந்தைகளுக்கு அந்த குறிப்பிட்ட நோய்க்கெதிராக நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால், இந்த ஆண்டு ஏராளமான குழந்தைகள் அந்த நோய்க்காளாகும் வாய்ப்பு உள்ளது.
Ile-de-France மற்றும் Grand-Est ஆகிய பகுதிகளில் துவங்கியுள்ள அந்த நோய்த்தொற்று, பிரான்ஸ் முழுவதும் பரவி, தற்போது பிரிட்டனி மற்றும் கோர்ஸிக்கா வரை வந்தெட்டிவிட்டது.
நவம்பர் 1 முதல் 7 வரையிலான வாரத்தில், bronchiolitisஆல் பாதிக்கப்பட்ட 4,100 குழந்தைகள் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள். அவர்களில் 35 சதவிகிதம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 4 சதவிகிதம் அதிகமாகும்.
மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்ட குழந்தைகளில் சுமார் 89 சதவிகிதம் குழந்தைகள் ஒரு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் ஆவர்.
குழந்தைகளைத் தொடும் முன் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவுதல், சானிட்டைஸர் பயன்படுத்துதல், கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை கொண்டு செல்வதைத் தவிர்த்தல், குழந்தையின் அறையில் சுத்தமான காற்றோட்டம் இருப்பதை அவ்வப்போது உறுதி செய்தல், குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள் மற்றும் அவர்கள் விளையாடும் இடங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், குழந்தைகள் அருகில் புகை பிடிக்கமால் இருத்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவது குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என மருத்துவர்கள் பெற்றோருக்கு ஆலோசனைகள் தெரிவிக்கிறார்கள்.