உயிருக்கு உத்தரவாதம் இல்லை... கனடாவிலிருந்து நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்ளும் ஒரு குடும்பம்
கனடாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு குடும்பம் தற்போது வெளியேற்றப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
கடனாவின் மில்டன் பகுதியில் கடந்த 2012 முதல் குடியிருக்கும் போர்த்துகல் நாட்டவர்களான ஒரு குடும்பம், தற்போதைய சூழலில் தங்களை வெளியேற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தங்களை போர்த்துகல் நாட்டுக்கு அனுப்புவது, அதுவும் இந்த கொரோனா அச்சுறுத்தல் சூழலில், அது ஒரு போர் நடக்கும் ஒருபகுதியில் தங்களை அனுப்புவது போன்று ஆபத்தானது என 15 வயது மகன் மற்றும் கணவருடன் கடந்த 8 ஆண்டுகளாக கனடாவில் வசித்து வரும் Eva Ferreira தெரிவித்துள்ளார்.
போர்த்துகல் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில், கனடா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தங்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றே ஈவா ஃபெரீரா சுட்டிக்காட்டியுள்ளார்.
வியாழக்கிழமையே அவர்களுக்கு வெளியேற்றப்படும் தகவல் கிடைத்துள்ளது. மட்டுமின்றி, எதிர்வரும் 11 திகதி கனடாவை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும்.
நாங்கள் கனடாவை நேசிக்கிறோம், நாங்கள் கனடாவில் தங்கலாம் என்றே நம்புகிறோம். ஆனால் தற்போதைய சூழலில் நேரம் கடந்துவிட்டதாகவே கருதுகிறோம் என்றார் ஃபெரீரா.
போர்த்துகலில் தற்போதைய சூழல் தொடர்பில் குறிப்பிட்டு, இந்த குடும்பத்தை வெளியேற்றப்படுவதில் இருந்து தடை கோர சட்டத்தரணியான Jacqueline Swaisland நீதிமன்றத்தை நாட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.