பிரித்தானியாவை விட்டு வெளியேற நினைத்தால் 5000 பவுண்ட் அபாரதம்! வரும் 29-ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகள் அமுல்
பிரித்தானியாவில் வரும் 29-ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அதில் முக்கியமாக தேவையில்லா காரணமின்றி பிரித்தானியாவை விட்டு வெளியேற நினைத்தால், 5000 பவுண்ட் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவத் துவங்கிவிட்டது.
இதன் காரணமாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாம் அதை உணர நேரிடலாம் என்று எச்சரித்ததுடன், இப்போதுள்ல நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்நிலையில், பிரித்தானியாவில் வரும் 29-ஆம் திகதி முதல் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் 2021 என்ற தலைப்பில் புதிய நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதாவது பிரித்தானியாவை விட்டு சரியான காரணமின்றி வெளியே செல்ல முயற்சித்தால், 5000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
சரியான காரணம் என்றால், வேலைக்கான பயணம், தன்னார்வத் தொண்டு, படிப்பு, சட்டபூர்வமான கடமைகள், மருத்துவ காரணங்கள், பாதிக்கப்படக்கூடிய நபருக்கு உதவி செய்வது, இறுதி சடங்கில் கலந்துகொள்வது, நெருங்கிய குடும்ப உறுப்பினரின் திருமணத்திற்கு செல்வது போன்றவை சரியான காரணங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் விடுமுறைக்கு செல்வது போன்றோ, அல்லது ஓய்வு நோக்கங்களுக்காகவோ நாட்டை வெளியேற முயற்சித்தால், அது அனுமதிக்கப்படாது. ஏனெனில், ஏப்ரல் 12-ஆம் திகதிக்கு முன்னர் உலகளாவிய பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் மதிப்பாய்வு செய்யுவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவிற்கு வெளியே பயணம் செய்ய அனுமதிக்கப்படுபவர்கள் பயண அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறியவர்களுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம்.
இந்த விதிமுறைகள் மார்ச் 29 முதல் நடைமுறைக்கு வரும். கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியா அரசு வேலைக்கு செல்லும் மக்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும் படி வலியுறுத்துகிறது.
மேலும், இரண்டு வீடுகளின் குழுக்கள், அல்லது வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர் வரை கூடிய கூட்டங்களும் வரும் மார்ச் 29-ஆம் திகதி முதல் வெளியில் சந்திக்க அனுமதிக்கப்படும் என்றும்,
வெளிப்புற விளையாட்டு வசதிகளும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் எனவும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளில் மக்கள் பங்கேற்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


