போருக்குத் தப்பி வந்த உக்ரைனியர்களுக்காக பிரான்சில் ஒரு மிதக்கும் குடியிருப்பு: வெளியாகியுள்ள வீடியோ
பிரெஞ்சு நகரம் ஒன்று, உக்ரைனிலிருந்து போருக்குத் தப்பி வந்த மக்களுக்காக கப்பல் ஒன்றையே தங்குமிடமாக மாற்றியுள்ளது.
Marseille நகரில்தான், அந்த கப்பல் மிதக்கும் குடியிருப்பாக மாற்றப்பட்டு, அதில் 1,600 உக்ரைன் அகதிகள் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
மணிக்கு 44 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய அந்தக் கப்பல் 2,450 பயணிகளையும், 750 வாகனங்களையும் ஏற்றிச் செல்லவல்லது.
வழக்கமாக, பிரான்ஸ், அல்ஜீரியா மற்றும் துனிசியாவுக்கிடையே பயணிக்கும் அந்தக் கப்பல், தற்போது ரஷ்ய தாக்குதலுக்குத் தப்பி வந்துள்ள உக்ரைனியர்கள் வாழும் வீடாக மாறுவதற்காக துறைமுகத்துக்குத் திரும்பியுள்ளது.
அந்தக் கப்பலில் தங்கும் வசதி மட்டுமின்றி, மருத்துவ வசதி, பிள்ளைகளுக்கான கல்வி வசதி முதலான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக Provence-Alpes-Côte d'Azur தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.